திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் - 9.
குறள் 9:
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
மு.வ உரை:
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்
சாலமன் பாப்பையா உரை:
எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே
கலைஞர் உரை:
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்
என் கருத்து:
கோள் என்றால் ஒன்றை பற்றி தவறாக சொல்லுதல், புறங்கூறுதல் என்பர். கோள் இல் என்றால் தவறாக சொல்ல ஒன்றும் இல்லை என்பதே கருத்தாக கொள்ளலாம்.
அதாவது, தவறாக சொல்ல ஒன்றும் இல்லாத புலன்களின் குணம் இல்லை. எது இல்லை என்றால், எண்ணுதற்கு முடியாத குணங்களை உடையவனின் பாதங்களை வணங்காத தலையை உடையவனின் புலன்கள் என்கின்றார்.
எண்குணத்தான் என்றால் எண்ணுதற்கு முடியாத, எண்களுக்குள் அடங்காத குணங்களை உடையவன், இறைவன் என்று கொள்ளலாம்.
அவர் பாதங்களை வணங்காத தலை, நல்ல புலன்களை உடையவர்களின் குணம் இல்லை.
அதாவது,
எண்ணுதற்கு முடியாத அளவிற்கு குணங்களை கொண்டவனின் பாதங்களை வணங்காமல் இருப்பது, குற்றம் சொல்ல முடியாத புலன்களை உடையவரின் குணம் அல்ல. அப்படி வணங்காமல் இருந்தால் அவர் புலன்களில் குற்றம் உள்ளது என்றே பொருள் கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment