திருக்குறள் - வான் சிறப்பு - குறள் - 15


 

குறள் 15:


கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை


மு. உரை:

பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்


சாலமன் பாப்பையா உரை:

பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்


கலைஞர் உரை:

பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்


என் கருத்து:

இந்த குறளை, கெடுப்பதும் மழை. அப்படி கெட்டவர்க்கு அதரவாக வேறு செயல்களினால் காத்து எடுப்பதும் மழை என்று பார்க்க வேண்டும்.


கெடுப்பது மழை என்றால் பெய்யாமல் கெடுப்பது மட்டுமல்ல. பெய்து கெடுப்பதும் மழைதானே?! அளவிற்கு மீறினால் மழையும் மரணத்தை கொடுக்கும். அதே போல, வாழ்க்கை அழிந்து போய் நிற்க கூடிய ஒருவனுக்கு அதரவாக, அதே மழைதான் வாழ்வினை கொடுக்கும்.


இந்த குறளின் அருமை என்ன என்றால், மழை என்ற சொல்லிற்கு அன்பு மழை என்று எடுத்து கொள்வோமானால், அளவுக்கு அதிகமான அன்பு ஒருவனுக்கு இருக்குமானால், அதனால், சில நேரங்களில், அவன் கெட்டு போகிறான். கெட்டு போன வாழ்க்கையில் அழிந்து போன ஒருவன், மீண்டும் உயிர் பெறுவது அதே அன்பினால் தான்!


இப்படி இரண்டு அர்த்தங்களை நான் எண்ணி பார்க்கிறேன்!


ஆக இந்த குறளை இப்படியும் பொருள் கொள்ளலாம்:


மழை சில நேரங்களில் பெய்யாமல் கெடுக்கும். சில நேரங்களில் பெய்து கெடுக்கும். கெட்டு போனவர்களுக்கு அதே மழைதான் சார்ந்து நின்று வாழவும் வழி செய்யும்.


Comments

Popular posts from this blog

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - முதல் குறள்.

இரத்ததில் பொறித்துவிட்டான்!

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் - 8.