திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் - 4
குறள் 4:
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
மு.வ உரை:
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை
சாலமன் பாப்பையா உரை:
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை
கலைஞர் உரை:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை
என் எண்ணம்:
முதலில் இன்ப துன்பங்களை சரி சமமாக பார்க்கக் கூடியவர் இறைவன் என்கிறார். இரண்டாம் பகுதியில் துன்பத்தை நீக்குபவர் என்கிறார். அவர் நம்முடைய துன்பத்தையும் இன்பம் என்று தானே நினைப்பார்? எப்படி நம் துன்பத்தை நீக்குவார்?
வள்ளுவர் கண்டிப்பாக முன்னுக்கு பின் முரணாக சொல்லி இருக்க மாட்டார். இதன் பொருளே வேறு என்று தான் தோன்றுகிறது.
வேண்டுதல் என்றால் நீங்களும் நானும் விரும்பி கேட்பதை. வேண்டாமை என்றால் கேட்காமல் விடுவதை. அதாவது, நீங்களும் நானும் வேண்டி கேட்பதையும் கேட்காமல் மறந்ததையும் இல்லை என்று சொல்லாதவனின் அடியை சேர்ந்தவர்க்கு எங்கும் துன்பம் இல்லை.
‘யாண்டும்’ என்பதற்கு ‘எங்கும்’ என்றே பொருள் சொல்லுவர். எங்கும் என்பது இப்பிறவி மறுபிறவி என்று எல்லா உலகங்களையும் சேர்த்துக் கொள்ளும் எண்ணத்தில் அவர் சொல்லி இருக்கலாம்.
அப்படி, கேட்டது கேட்காதது எதையும் இல்லை என்று சொல்லாதவர் தானே நம்மை துன்பங்கள் அணுகாமல் காப்பார்?
ஆகவே,
வேண்டி கேட்டதையும் வேண்டாமல் மறந்ததையும் இல்லை என்று சொல்லாதவரின் அடிகளை பற்றியவர்க்கு எந்த உலகத்திலும் துன்பம் இல்லை.
Makes me pondering
ReplyDelete