திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் - 8.
குறள் 8:
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
மு.வ உரை:
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது
சாலமன் பாப்பையா உரை:
அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்
கலைஞர் உரை:
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல
எனது கருத்து:
அறவாழி - அறத்தையே தன் வாழ்க்கையாக கொண்ட, அந்தணன் - அந்தி + அண்ணன். அந்தி அண்ணன் அல்லது அந்தணன். அந்திமக் காலத்தை அறிந்தவன் அல்லது அந்தியை உணர்ந்தவன். அதாவது கடைசி காலத்தில் உடன் இருப்பவன். அவனுக்கு தான் கடைசியில் எங்கு சென்று சேருவோம் என்பது தெரியும்!
எந்த ஒரு பயணத்திலும் முடிவு என்ன? எங்கே இருக்கும்? எப்படி சென்று சேர்வது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
வாழ்க்கை பயணம் மட்டும் விதி விலக்கா என்ன? எங்கே போய் சேர போகிறோம் என்பதை அறியாத வாழ்க்கை பயணம் எப்படி நல்ல படியாக முடியும்? அதனால் நாம் போய் சேர வேண்டிய இடத்தை அறிந்தவனின் பாதத்தை பணி என்கிறார்.
அறத்தை தன் வாழ்க்கையாக கொண்ட, இறுதியில் எங்கு சென்று சேருவோம் என்பதை அறிந்தவரின் (இறைவனின்) பாதங்களை அடையாதவர்கள் இந்த பிறவி என்னும் ஆழமான கடலை நீந்தி கடப்பது கடினம்.
நான் முன்னமே சொன்னது போல், இறைவனின் ஒவ்வொரு தன்மையையும் நமக்கு காட்டி, அதன் மூலம் நம் தேவைகளில் ஒன்றை பூர்த்தி செய்ய வழி சொல்லுகிறார், வள்ளுவர்!
Comments
Post a Comment