திருக்குறள் - வான் சிறப்பு - குறள் - 13
குறள் 13:
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி
மு.வ உரை:
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்
சாலமன் பாப்பையா உரை:
உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்
கலைஞர் உரை:
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்
என் கருத்து:
விண் என்ற சொல்லுக்கு மழை என்பது மட்டுமே பொருள் அல்ல. விண் என்பதில் மழை, வானம், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் என்ற பல அடங்கி இருக்கின்றன. மழை என்று மட்டுமே அர்த்தம் கொள்ளுவது சரியானதாக ஆகாது! இன்று என்றால் இல்லாது, பொய்ப்பின் - போனால்.
ஆதே போல், பசி என்று சொல் வெறும் உடற்பசியை மட்டும் குறிக்காது. அத்தனை தேவைகளையும் அது குறிக்கும். உள் நின்று உடற்றும் பசி என்கிறார் வள்ளுவர். அதுவும் கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தின் உள்ளே இருக்கக்கூடிய அத்தனை தேவைகள்; உடற்றும் தேவைகள் என்றால், உடல் அற்று போகின்ற அளவிற்கு இருக்கும் தேவைகள் என்று கொள்ள வேண்டும்.
அதாவது, இந்த குறளுக்கு பொருள்,
விண்ணாக இருக்கக்கூடிய சூரிய சந்திரன், மழை முதலான பலவும் இல்லாமல் போனால், அகன்ற கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தின் உள்ளே இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் உயிர் அற்றவைகளும் உடலை இழக்கும் அளவிற்கு வேதனை கொள்ளும்.
Comments
Post a Comment