திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் 6.




குறள் 6:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்


மு. உரை:

ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்


சாலமன் பாப்பையா உரை:

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்


கலைஞர் உரை:

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்



எனது எண்ணம்:


வள்ளுவர் இறைவனை பணிந்தவர்கள் வாழ்வார்கள், வெற்றி அடைவார்கள் என்று சொல்லாமல், ஒவ்வொரு முறையும், இறைவனின் குணங்களில் ஒன்றை காட்டி, அதன் படி வாழக்கூடியவர்கள், வெற்றி அடைகிறார்கள் என்று சொல்லுகிறார்.


இந்த குறளிலும் அவர் அதையே செய்கின்றார்!


பொறி வாயில்கள் ஐந்து! அந்த ஐந்தையும் அவித்தவர் என்றால் அழித்தவர் அல்லது  அணைத்தவர். நெருப்பை அணைப்பது போல்! அதனை அழித்ததனால், அந்த ஐம் புலன்களும் இல்லாத ஒருவராகிறார்.


ஒழுக்க சீர் கேடுகள் என்றுமே ஐம் புலன்களால் தான் உணரப்பட்டு, பெருகுகிறது. அந்த ஐந்து பொறிகளும் அற்று இருப்பவர், ஒழுக்கம் கெட முடியாது


ஐம் புலன்கள் அற்றவர், ஒழுக்கம் கெட வாய்ப்பே இல்லாதவர், எப்படி இருப்பாரோ, அப்படிப்பட்ட ஒழுக்க நெறியில் நிற்பவர்கள், நீண்ட காலம் வாழ்வார் என்கிறார்.


இதில் முக்கியமான வார்த்தைபொய்தீர்’. அவர் சொல்லுவது சாதாரண ஒழுக்கம் அல்ல! பொய்தீர் ஒழுக்கம்! அது என்ன பொய்யற்ற ஒழுக்கம்? அப்படி என்றால், பொய்யோடு ஒழுக்கங்கள் இருக்கின்றனவா? பொய் இல்லாமல் இருந்தால் தானே அது ஒழுக்கம்?


வள்ளுவரின் வார்த்தை: ‘தன் நெஞ்சறிவது பொய்யற்கஎன்பார். மற்றவர்களுக்கு பொய் என்று தெரிய வேண்டியதில்லை. தனக்கு பொய் என்று தெரிந்தாலே அது பொய்தான்! பொய்தீர் ஒழுக்கம் என்றால், அடுத்தவர்க்காக இருக்கும் ஒழுக்கம் அல்ல. தனக்கு தானே ஒழுக்கமாக இருப்பது என்றே கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அது உண்மையான ஒழுக்கம் ஆகிறது! நம் ஒழுக்கத்திற்கு நாமே நீதிபதி. அதுதான் பொய்தீர் ஒழுக்கம்!


இறைவன் யாருக்காகவும் ஒழுக்கமாக இருப்பது இல்லை. தனக்காக, சுய கட்டுபாட்டுடன் அவர் ஒழுக்கமாக இருக்கிறார். அவருடைய ஒழுக்கம், பொய்யற்றது!


ஆக,


ஐம் புலன்கள் அவிந்ததால், ஒழுக்கம் கெட வாய்ப்பே இல்லாத இறைவனை போல தனக்கே நேர்மையாக பொய்யற்ற ஒழுக்கத்தை பின்பற்றுகிறவர், நீண்ட காலம் வாழ்வார்கள்.



Comments

Popular posts from this blog

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - முதல் குறள்.

இரத்ததில் பொறித்துவிட்டான்!

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் - 8.