திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் - 5.
குறள் 5:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
மு.வ உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை
சாலமன் பாப்பையா உரை:
கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை
கலைஞர் உரை:
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்
என் கருத்து:
‘இருவினை’ என்பதனை இரண்டு வினைகள் என்று அர்த்தம் எடுப்பது ஒன்று. அதை இருக்கின்ற வினை, அதாவது பல காலங்களாக நாம் செய்து வினை பயன் என்று எடுத்துக் கொள்வது இன்னொன்று. பல பிறவிகளாக பல காலங்களாக இருக்கின்ற வினை பயன் என்று எடுத்துக் கொள்ளலாம்.
இரண்டாம் பொருளே இந்த இடத்தில் பொறுந்தும், ஏனென்றால் ‘இருள்சேர் இருவினை’ என்கின்றார் வள்ளுவர். அதாவது, இருளை சேர்க்கும் வினை; துன்பத்தை சேர்க்கும் வினை. இருள் என்பது கஷ்டத்தையும் துன்பத்தையும் குறிக்கும். நல்வினை எப்படி துன்பத்தை கொடுக்கும்? இருளான வாழ்க்கையை தரக்கூடிய நம்முடன் பல பிறவிகளாக இருக்கக்கூடிய தீய வினைப்பயன்கள்!
இவைகள் ‘சேரா’! யாரிடம் சேராது என்றால், இறைவனின் பொருள் அறிந்து புகழ் புரிந்தார் இடத்தில் என்று சொல்லுகிறார் வள்ளுவர். புகழ் எப்படி கிடைக்கும்? தன்னுடைய செயல்களால்தான் ஒருவருக்கு புகழ் கிடைக்கும். புகழ் புரிந்தார் என்றால் புகழை கொடுக்கக் கூடிய செயல்களை புரிவது அல்லது செய்வது.
அதாவது,
இறைவனின் உண்மையான பொருளை புகழ் தரக்கூடிய தன் செயல்களில் இணைத்து கொண்டவர்களுக்கு, வாழ்க்கையில் இருளை சேர்க்கும் துன்பமாக நம்முடனே இருக்கும் வினைப்பயன்கள் வந்து சேராது.
Comments
Post a Comment