திருக்குறள் - வாய்மை - குறள் - 292




 குறள் 292:


பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கு மெனின்


மு. உரை:

குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.


சாலமன் பாப்பையா உரை:

குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்.


கலைஞர் உரை:

குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்


எனது கருத்து:


இந்த குறளை போல் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்ட குறள் வேறு இல்லை என்றே சொல்ல வேண்டும்!


தமிழில் அக்காலத்தில் கேள்விக்குறிகளோ, ஆச்சரிய குறிகளோ, முற்றுப்புள்ளிகளோ இருக்கவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.


பொய்மையும் வாய்மை இடத்து - பொய்யும் உண்மையாகலாம், என்கிறார். எப்பொழுது?


புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனில். அதாவது, புரை இல்லாத நன்மை. புரை என்றால் என்ன


கண்ணில் புரை விழுந்து விட்டது என்றால் பார்வை மங்கலாகிவிடும். புரை என்றால் ஏதாவது ஒரு குற்றம்; அல்லது பிழை; அல்லது கலங்கம்.


புரை தீர்த்த நன்மை என்றால் குற்றம் அற்ற நன்மை, பிழை இல்லாமல் எல்லோருக்கும் எல்லா உயிர்களுக்கும் நன்மையாக இருப்பது தான் புரைதீர்ந்த நன்மை. அப்படி ஒரு நன்மை இருக்க முடியுமா?


எந்த ஒரு காரியமும் நாலு பேருக்கு நன்மை செய்கிறது என்றால் ஏதோ ஒருவருக்கு தீமை செய்கிறது என்பதே உண்மை. அதே போல்தான் சொற்களும். ஆயிரம் பேருக்கு நன்மை செய்வது பத்து பேருக்காவது தீமை செய்வதாக இருக்கும்!


புரை தீர்ந்த நன்மை என்பது நடக்க முடியாத ஒன்று!


அதனால் தான், வள்ளுவர் சொல்லுகிறார். நீ சொல்லுகின்ற பொய்யயை உண்மையாக எடுத்துக் கொள்ளலாம், எப்பொழுது என்றால் நீ கூறும் பொய் எந்த ஒரு பொருளுக்கும், உயிருக்கும் பிழை அற்ற நன்மையை கொடுக்கும் என்கின்ற பொழுது! அப்படி ஒன்று இருக்க முடியாது அதனால், பொய் என்றும் உண்மை ஆகாது என்பதே இதனுடைய பொருள்.


ஆகவே,


குற்றமற்ற நன்மையை ஒரு பொய் எல்லா உயிர்களுக்கும் உயிர் அற்றவைகளுக்கும் கொடுக்கும் என்றால், அந்த பொய் உண்மையாக கருதப்படும். அப்படி எந்த ஒரு செய்லும் இருக்க முடியாது. அதனால், பொய் என்றும் உண்மையாகாது.


Comments

Popular posts from this blog

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - முதல் குறள்.

இரத்ததில் பொறித்துவிட்டான்!

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் - 8.