திருக்குறள் - வான் சிறப்பு - குறள் - 14
குறள் 14:
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்
மு.வ உரை:
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்
சாலமன் பாப்பையா உரை:
மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்
கலைஞர் உரை:
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்
எனது கருத்து:
புயல் என்ற சொல்லுக்கும் மழை என்ற சொல்லிற்கும் உள்ள வேறுபாடுகளை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
புயல் என்ற சொல், பின் நாட்களில் புனல் என்று திரிந்து நடைமுறையில் உள்ள ஒரு சொல். அதாவது, மழையால் நீர் பிரவாகமாக ஓடும் பொழுது அது புனல் அல்லது புயல் ஆகிறது. காவிரி புனல் - சிலப்பதிகாரத்தில் மற்றும் பல இடங்களில் உபயோகப்படும் ஒரு வார்த்தை. மழையை தொடர்ந்து வரும் நீர் வெள்ளமாக வரும்.
அந்த வெள்ளம் வளமான மணலை வயல்வெளிகளுக்கு கொண்டு வந்து சேர்க்கும். அதனால்தான் அதை அவர் ‘வாரி வளம்’ என்று சொல்லுகிறார்.
அந்த வெள்ளத்தையும் வளமான மணலையும் உபயோகிக்க தவறினால், உழவு தொழில் குன்றிவிடும்.
ஆகவே,
மழைக்கு பின் வரும் புனலில் வரும் வெள்ளத்தையும், அது அடித்து வரும் வளமான மணலையும் உபயோகிக்காமல் நாம் குன்றி போவோமேயானால், உழவர் ஏரினை கொண்டு உழ மாட்டார்கள்.
Comments
Post a Comment