திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் 7.


 


குறள் 7:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது


மு. உரை:

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது


சாலமன் பாப்பையா உரை:

தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்


கலைஞர் உரை:

ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை


எனது கருத்து:


தனக்குவமை இல்லாதான்என்பது தனக்கு இணையானவன், ஒப்பு நோக்கப்பட கூடியவன் இல்லாதவன் என்று பொருள், மேலோட்டமாக பார்த்தால் நமக்கு தெரிவது. கூர்ந்து நோக்குவோமானால், ஒப்பு இல்லாதவன் யார்?


அவனிடம் பொருள் எவ்வளவு இருக்கிறது? என்னிடம் எவ்வளவு இருக்கிறது? ஒப்பு நோக்க முடியும். நான் அழகாய் இருக்கிறேன். அவன் அழகாய் இருக்கிறானா? ஒப்பு நோக்க முடியும். அவனிடம் பணம் எவ்வளவு? அவன் மனைவி எப்படி? குழந்தைகள் எப்படி? எத்தனை பேர்?


இப்படி ஏதேனும் ஒன்றை ஒருவர் பெற்று இருந்தால் மட்டுமே ஒருவரை இன்னொருவருடன் ஒப்பு நோக்க முடியும். ஒரு திறமை அல்லது நிறம் அல்லது குணம். ஏதேனும் ஒன்று, அவரிடம் இருக்க வேண்டும். அப்பொழுது தான் அவரை இன்னொருவருடன் ஒப்பு நோக்கி அவரை விட இவர் சிறந்தவர் அல்லது தாழ்ந்தவர் என்று கூற முடியும். இல்லை அவரை போல் இவர் என்று கூற முடியும்.


எந்த ஒன்றும் தனக்கென்று வைத்து கொள்ளாதவர், எந்த ஒரு தனி சிறப்போ தனி குணமோ அற்றவர். எல்லா குணங்களையும் தன்னுள்ளே அடக்கியவர். எல்லா பொருட்களையும் உள் அடக்கியவர். அதே சமயம், எதனையும் தன்னிடத்தில் வைத்துக் கொள்ளாதவர்!


அவரை யாருடனும் ஒப்பிட்டு பார்க்க முடியாது! ஏனென்றால் அவரிடத்தில் எதுவுமே இல்லை. அதனால், அவருக்கு எல்லாம் சொந்தம்!


தாள் என்ற சொல்லுக்கு தேடுதல் என்று ஒரு பொருளும் உண்டு. தனக்கு என்று எதுவுமே வைத்து கொள்ளாத இறைவனை தேடி சேர்ந்தவர் மட்டும் தான் மனக்கவலைகளை மாற்ற முடியும், என்கிறார் வள்ளுவர். மாற்ற முடியும் என்றால் கவலைகளை முற்றிலுமாக அழிக்க முடியாது. ஒரு கவலை இன்னொன்றாக மாறத்தான் முடியும். அதாவது, துன்பம் தரும் கவலை இன்பம் தரும் கவலையாக மாறும்.


இந்த குறளை இப்படியும் பார்க்கலாம்.


ஒப்பிட்டு பார்க்க எதுவுமே இல்லாத ஒருவரும், எல்லாமே உடைய ஒருவருமான, இறைவனை தேடி அடைந்தவர்களுக்கு மட்டுமே மனக்கவலையானது துன்பம் தருவதாக இல்லாமல் இன்பம் தருவதாக மாறும்’.


Comments

Popular posts from this blog

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - முதல் குறள்.

இரத்ததில் பொறித்துவிட்டான்!

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் - 8.