திருக்குறள் - வான் சிறப்பு - குறள் - 12
குறள் 12:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை
மு.வ உரை:
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்
சாலமன் பாப்பையா உரை:
நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே
கலைஞர் உரை:
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது
எனது கருத்து:
செடி கொடிகள் உணவு சங்கிலியின் ஆரம்பம். இலை தளைகளை உண்டு வாழும் மிருகங்களுக்கு அவைகள் உணவு ஆகின்றன. அவைகளே மற்ற கொடிய மிருகங்களுக்கு உணவாக மாறுகின்றன. இவை எல்லாவற்றிற்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மழை உணவாகிறது என்பதை தான் வள்ளுவர் அழகாக இங்கே சொல்லுகிறார் என்பது என் கருத்து.
உண்ணக்கூடியவர்களுக்கு உண்ணக்கூடிய பொருளை உருவாக்கவும், உண்ணக்கூடிய பொருளாகவும் மழை இருக்கிறது, என்பதுதான் மேலோட்டமான கருத்தாக கொள்ள வேண்டும்.
அவர் மனிதனை மட்டுமே குறிப்பதாக நாம் இதை கொள்ள முடியாது. செடி கொடிகளும் உண்கின்றன. அவைகள்தான் மற்ற விலங்குகளுக்கும் மிருகங்களுக்கும் உணவை தயாரிக்கின்றன. அவைகளே உணவாகவும் மாறிவிடுகின்றன. இவைகள் எல்லாவற்றிற்கும் மழைதான் ஆதாரமாக விளங்குகிறது என்றே பொருள் கொள்ள வேண்டும், என்று எண்ணுகிறேன். மழையே எல்லா ஜீவ ராசிகளுக்கும் ஆதாரமாக உள்ளது.
ஆகவே,
உண்ணக்கூடிய பொருளை உருவாக்குவதற்கும், உண்ணக்கூடிய பொருளாக மாறுகின்ற பொருட்களும் உருவாவதற்கு மழையே ஆதாரமாக உள்ளது.
Comments
Post a Comment