இரத்தக்கறை




1.


கஜினி முகமது அவையில் வீற்றிருக்கிறான்!


பல வெற்றிகளை கண்டவன். தன் ராஜியத்தை மேற்கே யூபரட்டீஸ் நதிக்கரையில் இருந்து கிழக்கே சிந்து நதி வரை பரவச் செய்து இருந்தான். தான் அடைந்த வெற்றியின் அடையாளமாக இரண்டு நாட்களுக்கு முன்னால்தான் சுல்தான் என்ற பட்டத்தை தரித்து கொண்டான்! கஜினாவித் ராஜ்யத்தின் சுல்தான் முகமது!


வெகு கம்பீரமாக வீற்றிருந்த சுல்தான் முன்னால் காவலர்கள் ஒருவனை இழுத்து வந்தார்கள்.


அல்லாவின் ஆசி பெற்ற கஜினாவித்தின் சுல்தானுக்கு அமைதி உண்டாகட்டும்!’ என்று கூவி விட்டு காத்திருந்தார்கள்


முகமது அவர்களை பார்த்து கேட்டான். ‘இவன் செய்த தவறு என்ன? எதற்காக இவனை இழுத்து வந்து இருக்கிறீகள்?’


காவலன் ஒருவன் பதில் அளித்தான்: ‘சுல்தான், இவன் தான் உயர்ந்த பிறவி என்கிறான். நாம் எல்லோரும் இவனுக்கு வணங்க வேண்டும் என்கிறான்! கடைவீதியில் இன்று, இவன் வருகைக்கு வழிவிட்டு நிற்கவில்லை என்று அங்கே இருந்த ஒர் ஏழையை அடித்துவிட்டான்!’


சிரித்தான் முகமது. ‘வெளி நாட்டானாக இருக்கும். அவர்கள் நாட்டில் இவன் பெரிய மரியாதைக்கு உரியவனாக இருப்பானோ, என்னவோ? ஏன் அதை பெரிது படுத்துகிறாய்?’


மீண்டும் உரக்க சிரித்த முகமது, கொண்டு வரப்பட்ட மனிதனை பார்த்தான்.


முன் தலை வழுக்கையாக இருந்தது. பின்னால் குடுமி. குளிருக்காக மான் தோலை போர்த்துக் கொண்டு இருந்தான். கால்களை மறைத்துக் கொண்டு நெய்யப்பட்ட பருத்தி துணியை சுற்றி இருந்தான். அவனை பார்த்தால் கண்டிப்பாக கத்தி ஏந்தும் வீரனாக தெரியவில்லை! சிந்து நதியினை கடந்து வந்தவன் போல் தெரிந்தான். பொதுவாக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள், இப்படி வர மாட்டார்களே என்று எண்ணிக் கொண்டான்.


யார் நீ? எந்த நாட்டவன்? எங்கிருந்து வருகிறாய்? எதற்காக இங்கே வந்தாய்?’ கேள்விகளை அடுக்கினான், முகமது!


வந்தவன், கைகளை கூப்பி கொஞ்சம் வலைந்து வணங்கினான். அரசனுக்கு உரிய மரியாதையை அளித்த பிறகு, எந்த விதமான பயமும் இல்லாமல், சமஸ்கிரதத்தில் பேசினான்.


மன்னனே! வணக்கம்! நான் கத்தைவாரில் இருந்து வருகிறேன்!’ என்றான்.


சுல்தானுக்கு என்ன சொல்லுகிறான் என்பது புரியவில்லை. ஆனால், அவன் செய்த செய்கையில் மரியாதை செய்கிறான் என்பதை புரிந்து கொண்டான்.


ஏய், யாருக்கு இவன் பேசும் மொழி புரிகிறது?’ என்றவன் அவையை நோக்கி கேட்டான். பின்னர் அந்த மனிதனை பார்த்து தொடர்ந்து பேசினான்.


நீ எங்களை போல் பாரசீகம் பேச மாட்டாயா? அல்லது சிந்து நதியை கடந்து வரும் வணிகர்களை போல பாலி பேசமாட்டாயா? நீ பேசுவது எங்களுக்கு புரியவில்லையே’, என்றான்.


வந்தவன், பாலி மொழியில் பேச ஆரம்பித்தான். ‘மன்னவனே! நான் கத்தைவாரில் இருந்து வருகிறேன். என் பெயர் பானன். என்னை பான பட் என்று அழைப்பர்கள். இங்கே உள்ள மலைகளில் கிடைக்கும் ஒரு சில மூலிகைகளுக்காக வந்தேன்’.


ஹாஇந்துக்களை கொல்லும் எங்கள் மலைகளை சொல்லுகிறாயா? கொலை செய்யும் மலைகளில் இருந்து உங்களுக்கு என்ன மூலிகைகள் கிடைக்கப் போகின்றது?’ (Hindu Kush இந்து குஷ் மலைகள் என்றால் இந்துக்களை கொல்லும் மலைகள் என்று பொருள்).


அப்பொழுது உடன் வந்த காவல்காரன் பதில் சொன்னான்.


சுல்தான் அவர்களே! இவர் போதை தரும் மூலிகைகள் வேண்டும் என்று தேடி வந்து இருக்கிறார். அதனால்தான் தங்கள் முன்னால் அழைத்து வந்தோம்’, என்றான்.


.. அப்படியா சேதி! உங்களுக்கு எதற்கு போதை மருந்து? போதை பொருட்களில் வியாபாரம் செய்ய ஆரம்பித்துவிட்டீர்களா, என்ன?’


இல்லை, இல்லை! எங்கள் ஊரில் விழாவின் போது இறைவனுக்கு போதை பொருட்களை படைப்போம். பின் அதை நாங்களும் உட்கொள்வோம்’.


போதை பொருட்களை கேட்கும் இறைவன்! ஹாஹா…’ என்று சத்தமாக நகைத்தான் முகமது. அவனுடன் சேர்ந்து அவையில் இருந்தவர்களும் நகைத்தார்கள்!


, இந்துவே! உன் பேர் என்ன சொன்னாய்?’

பானன்

ஹா! பானா, உனக்கு பாலி மொழி தெரிந்து இருந்தும் எனக்கு புரியாத ஏதோ ஒரு மொழியை பேசினாயே, ஏன்?’


ஒரு நிமிடம் யோசித்த பான பட்டன் கூறினான்.


நான் பேசிய மொழி புனிதமானது. நாங்கள் இறைவனுடன் பேசுவதற்கு பயன்படுத்தும் மொழி! சமஸ்கிரதம் என்பது அதன் பெயர். உங்களுக்கு இறைவனுடன் பேசும் மொழி தெரிந்து இருக்கும் என்று நினைத்தேன்’, என்றான். அதில் இருந்த கேலியை சுல்தான் கவனிக்க தவறவில்லை!


என்ன அமைச்சரே! நாம் எந்த மொழியில் இறைவனுடன் பேசுகிறோம்?’


அமைச்சர் கூறினார்

சுல்தான், நாம் அரமிக் மற்றும் பாரசீக மொழிகளில் தான் பேசுகிறோம்என்றார்.


நீர் ஏன் எங்கள் இடத்தில் சம்ஸ்கிரதத்தில் பேசினீர்? ஒரு வேளை எம்மை இறைவன் என்று நினைத்துவிட்டீரோ?’ சிரித்துக் கொண்டே முகமது அமைச்சர் பக்கம் திரும்பி, கேட்டான். ‘ஒரு வேளை நமக்கும் போதை மருந்து கொடுத்துவிடுவானோ?’


முகமது சத்தமாக சிரித்தான்.


அவை அமைதியாக இருந்தது. அங்கு உள்ளவர்களுக்கு தெரியும் இந்த சிரிப்பின் அர்த்தம் என்ன என்று. சுல்தானை எப்படி கேலி செய்யலாம்? அந்த பான பட் தவறு செய்துவிட்டான்.


நடப்பதை உணர்ந்த பானன், ‘மன்னித்து விடுங்கள், சுல்தான்! நான் இறைவனுடன் பேசுவது போல் பேசிவிட்டேன்’.


ஏன், உங்கள் இறைவன் என்னளவு பலசாலியா? இல்லை என்னை விடவும் பலசாலியா? எப்படி நீ என்னை உன் இறைவனுக்கு சமமாக பார்க்கலாம்?’


பானன் அமைதியாக நின்றான். எது பேசினாலும் தவறாக போய்விடுமோ என்று பயந்தான்.


முகமது திடீரென்று சத்தமாக, போர் களத்தில் கத்தும் ஒலியாக, உரக்கமாக கேட்டான்


நான் கேட்ட கேள்விக்கு பதில் கூறுவாயா, இல்லையா?’ அவன் வார்த்தைகளில் இருந்த சீற்றம், அங்கு உள்ள எல்லோரையும் அமைதி படுத்தியது.


பானன்னுக்கு வேர்த்தது. அவன் வார்த்தைகள் குளறியது! ‘இல்லை..ஆமாம்என்று உளறினான்.


என்ன சொல்லுகிறாய்? ஆமா, இல்லையா? சரியாக பதில் சொல்’.


எதை சொல்லுவான் அவன்? ஆம் என்றால், எந்த கேள்விக்கு ஆம். இல்லை என்றால் எந்த கேள்விக்கு இல்லை


பதில் கூறாமல் தரையை நோக்கி நின்றான், பானன்!


மீண்டும் கர்ஜித்தான், முகமது. ‘உன் இறைவன் பலசாலி என்றால், எம் இறைவன் பலசாலி இல்லையா? நான் பலசாலி இல்லையா?’


நான் அப்படி சொல்லவில்லை, மன்னா!’


அப்பொழுது உன் இறைவன் பலமற்றவன் என்பதை ஒப்பு கொள்கிறாயா?’


அவன் நிமிர்ந்து முகமதுவை பார்த்தான். சுல்தானை நிமிர்ந்து பார்ப்பதுவே அந்த ஊரில் குற்றம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது!


என்ன பார்க்கிறாய்? உன் இறைவன் எங்கே இருக்கிறார், சொல்?’


அவர்அவர்சோமனாதபுரம் கோவிலில் இருக்கிறார்


கஜினி முகமது கோபத்தில் கத்தினான். ‘என் அயாஸ் எங்கே? அயாஸ்!!’ 


மாலிக் அயாஸ் ஓடி வந்து ஒரு காலில் மண்டி இட்டு இன்னொரு காலை மடக்கியும் நின்றான். அயாஸ், கஜினி முகமதின் அடிமை! முகமது அவனை ஜார்ஜியாவில் சிறை பிடித்து அடிமை ஆக்கினான். நாட்களின் ஓட்டத்தில், அவனும் முகமதும் உற்ற தோழர்கள் ஆகி போனார்கள்! எப்படி இருந்தாலும் அடிமை அடிமை தானே!


கடவுள் உங்களுக்கு அமைதியை கொடுக்கட்டும்’, என்றான் அயாஸ்.


அயாஸ், இவர் சொல்லும் சோமனாதபுரம் என்னும் இடம் எங்கே இருக்கிறது? நாம் அந்த ஊரை வெற்றி கொள்ள எவ்வளவு நாட்களாகும்?’ கடவுள் முகமதுவிற்கு அமைதியை கொடுத்ததாக தெரியவில்லை.


சோமனாதபுரம் தெற்கே உள்ளது. ஏறக்குறைய இரண்டு வாரங்கள் நாம் பயணிக்க வேண்டும், சுல்தான்!’


மீண்டும் கர்ஜித்தான் முகமது, ‘அப்படியே செய், அயாஸ்! நாம் உடனடியாக படையை தயார் செய்கிறோம். அந்த சோமனாதபுரத்து கடவுள் தன்னை காத்து கொள்கிறாரா என்று பார்ப்போம்?


இங்கே இருக்கும் இந்த மனிதன் சொல்லுகிறானே, அவர் சக்தி வாய்ந்தவர் என்று. போகிறோம், இவன் கடவுளை வென்று திரும்புகிறோம். அந்த கடவுளின் சொத்துக்களை நம் ஊரில் கொண்டு வந்து குவிக்கிறோம்! புரிகிறதா?’


அவன் தொடர்ந்தான்: ‘ஏய்! இந்து நாட்டில் இருந்து வந்தவனே! கேட்டுக் கொள்! எங்கள் படை உடனடியாக புறப்படும். நீயும் அதனுடன் இழுத்து செல்ல படுவாய்! அங்கே உன் கடவுள் தோற்கடிக்கப்படுவார். அப்படி அவர் தோற்றப்பின்னால், அவர் அரண்மனையை நாங்கள் சூரையாடுவோம்! அதை முடித்த பிறகு, உன் தலையை அந்த இறைவனின் அரண்மனை முன்னால் கொய்து, படைத்துவிட்டு திரும்புவோம்!’ என்றான்.


———





2.


சோமனாதபுரம்!


ரம்மியமான அழகான சிற்றூர். நம் பார்வைக்கு வரும் நாட்களில், அந்த சிற்றூரை முதலாம் பீமன் என்று அழைக்கப்பட்ட, சாளுக்கிய வம்சதாரிகள் ஆண்டு வந்தார்கள்.


பீமனின் நாடு மிகவும் பணம் படைத்த நாடு. சோமனாதபுரம், வேராவல் என்ற துறைமுகத்தை ஒட்டி இருந்தது. அங்கிருந்து வியாபாரம் உலகம் முழுவதும், கத்தைவாரின் வியாபாரிகள் செய்து வந்தார்கள். மிகுந்த பணம் படைத்தவர்களாகவும் அவர்கள் திகழ்ந்தார்கள்!


பீமன் அழகான கோவிலை நிர்மாணித்து இருந்தான். அது மட்டுமில்லாமல் அங்கு உள்ள மக்களுக்கு பயபக்தி நிறைய இருந்த காரணத்தால், அவர்கள் தொடர்ந்து பல நன்கொடைகளை அந்த கோவிலுக்கு வழங்கி அதை பெரும் கோவிலாக மாற்றி இருந்தார்கள்.


பல ஊர்களில் இருந்தும் புனித யாத்திரையாக பலரும் அங்கே வந்த வண்ணம் இருந்தார்கள். இந்த ஊரிலும், பீமனின் நாட்டிலும் மக்கள் இந்து மதத்திலும், இந்து மத கொள்கைகளிலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள்! எந்த ஒரு சமயத்திலும் அதன் கட்டுபாடுகளில் இருந்து தங்களை தளர்த்து கொள்ளாதவர்களாக இருந்தார்கள்.


இப்படி பட்ட ஊரின் மீதுதான், நாட்டின் மீதுதான், கஜினி முகமது படை எடுத்து வந்து கொண்டு இருந்தான்!


—————-


3.


கஜினி முகமது படை வந்து கொண்டு இருப்பதையும் தங்கள் தேசத்தினை தாக்கவும், குறிப்பாக சோமனாதபுரத்தை தாக்கவும் வந்து கொண்டு இருப்பதை ஒற்றர்கள் மூலமாக அறிந்து கொண்டான் பீமன்.


ஏறக்குறைய நாற்பதாயிரம் படை வீரர்களுடன் அவர்கள் புயலாக வந்து கொண்டு இருந்தார்கள். இன்னும் ஒரு வாரத்தில் அவர்கள் நம் கோட்டை கதவுகளை தட்டுவார்கள் என்பதை ஒற்றன் தெரிவித்தான். உடனடியாக போர் வீரர்களை தயார் செய்ய சொல்லி ஆணை பிறப்பித்தான் மன்னன்.


தளபதியாரே! நம் படை தயார் செய்ய எவ்வளவு நேரம் தேவை படும்? போரின் தேவைகள் என்ன?' என்றெல்லாம் கேட்டான், பீமன்.


மன்னா, நம் இடத்தில் இருக்கும் படையை தயார் செய்ய நமக்கு ஒர் இரு நாட்கள் போதுமானது. ஆனால், இரண்டாயிரம் பேரே கொண்ட நம் படை அவர்களின் நாற்பதாயிரம் பேர் கொண்ட படையின் முன் ஒன்றுமே இல்லை. அது மட்டுமல்ல. அவர்கள் தொடர்ந்து பல போர்கள் புரிந்த வண்ணம் இருக்கும் படை வீரர்கள். நாமோ, போர் என்பதை அறியாதவர்கள். நம் மக்களை மிரட்டுவதற்கும், அவர்கள் இடமிருந்து வரி வசூல் செய்வதற்கும் மட்டுமே இவர்களை நாம் பயன்படுத்தி இருக்கிறோம்’.


சரி, இருந்தாலும், நாட்டிற்கு ஒரு கேடு என்றால் நம் நாட்டு மக்கள் ஒன்று சேர்ந்து வருவார்கள். அவர்களை கொண்டு ஒரு பெரும் படையை திரட்டுங்கள். நீங்கள் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை திரட்டிவிட்டீர்கள் என்றால், அவன் பயப்படுவான்’, என்றார் மன்னர்.


அப்படியே செய்கிறேன், மன்னா!’ என்ற மந்திரி, மக்களை போர் படையில் சேர்க்க புறப்பட்டார்.


ஒவ்வொரு ஊரில் சென்றும் மக்களை அணி வகுக்க செய்து, அவர்களிடம் போர் அபாயத்தை கூறி எல்லோரும் ஒன்று சேர்ந்தால் வரும் ஆபத்தை தவிர்க்கலாம் என்றார். எல்லோரையும் உடனடியாக படையில் சேரச்சொல்லி வற்புறுத்தினார்.


அப்படி இருந்தும், இரண்டு நாட்களுக்கு பிறகு ஆயிரம் பேர் கூட படையில் சேரவில்லை. வெகுவாக ஏமாற்றம் அடைந்த தளபதி, மீண்டும் சோமனாதபுரத்தில் மக்களை கூட்டினார். மக்களை பார்த்து அவர் வினவினார்.


மக்களே! நம் நாடு பெரும் அபாயத்தில் இருக்கிறது. நம் பணம் சோமனாதபுரத்து கோவிலில் இருக்கிறது. நம் தெய்வம் அந்த கோவிலில் குடி இருக்கிறது. நம் தெய்வத்திற்காகவும், நம் செல்வத்திற்காகவும், நாம் ஒன்று கூடி போரிட வேண்டும். நம்மிடம் நிறைய பணம் உள்ளது. நான் உங்களுக்காக வாளும் வில்லும் வேலும், இன்னப் பிற ஆயுதங்களும் தயாராக வைத்து இருக்கிறேன்


மக்களே! ஆயுதங்கள் இருந்து என்ன செய்வது? போரிட வாலிபர்கள் வேண்டாமா? வீரர்கள் வேண்டாமா? நாட்டை காக்க உடனடியாக படையில் சேருங்கள்!’ என்று கூக்குரலிட்டு அழைத்தார்.


அப்பொழுதும் மிக குறைந்த ஆட்களே படையில் சேருவதை பார்த்த தளபதி, மிகுந்த வருத்ததுடன், ‘ஏன் யாரும் போருக்கு தயாராக வரவில்லை? ஏன் ஆயுதங்கள் ஏந்த தயங்குகிறீர்கள்?’ என்று கேட்டார்.


அப்பொழுது, அந்த கூட்டத்தில் இருந்து ஒருவன் பதில் உரைத்தான்:


ஐயா! நம் மத தர்மத்தின் படி நாங்கள் வியாபாரம் செய்ய வேண்டியவர்கள். இதோ, இவர்கள், விவசாயம் செய்ய வேண்டியவர்கள்! அவர்களோ கொல்லர்கள். நாங்கள் உங்களுக்கு தேவையான உணவை கொடுப்போம்; ஆயுதங்களை கொடுப்போம். ஆனால் போர் புரிவது, சத்திரியர்களின் வேலை. இதில் எங்களை ஏன் அழைக்கிறீர்கள்? எங்களின வேலைகளில் எதிலாவது நீங்கள் பங்கு கொண்டீர்களா?


அது மட்டுமல்ல, ஐயா! தயவு செய்து நீங்கள் நம் பட்டரை கேளுங்கள். அவரே சொல்லி இருக்கிறார். ஆயுதங்கள் செய்து சத்திரியர்களுக்கு கொடுக்க வேண்டுமே ஒழிய நாம் அதை தொடுதல் அல்லது அதை உபயோகிப்பது மிக பெரிய பாவம். நம் தர்மத்திற்கு உகந்தது அல்ல! அதையும் மீறி நாங்கள் ஆயுதங்களை கையாண்டால், அதற்கான தண்டனை உடனே கிடைக்கும். அப்படி ஒரு வேளை தண்டனை உடனே கிடைக்கவில்லை என்றால், நாங்கள் நரகத்தில் விழிந்து அழிய வேண்டும். இதை எத்தனை முறை சொல்லி இருக்கிறீர்கள்?


இப்பொழுது நீங்களே ஆயுதங்களை ஏந்துங்கள் என்று சொல்லுவது எப்படி சரியாகும்? பணம் போனால் திரும்ப சம்பாதித்து கொள்ளலாம். தர்மம் தவறிவிட்டால் பல ஜென்மங்களுக்கும் அந்த கலங்கம் இருக்கும் அல்லவா? தர்மத்திற்காக உயிரை விடுவது மேல், என்றல்லவா நீங்கள் போதித்து உள்ளீர்கள்!’ என்று கூறினார்.


தளபதிக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியவில்லை! மதத்தின் கொள்கைகள் தவறு என்று சொல்லவும் முடியவில்லை. அதே சமயம் அதை சரி என்று ஒப்பு கொள்ளவும் முடியவில்லை.


—————


4.


பீமன், வீரர்கள் கிடைக்கவில்லை என்றதும், சோமனாதபுரத்தில் இருந்து நூற்று ஐம்பது கல் தொலைவில் இருக்கும் கந்தகோட்டத்தில் சென்று தஞ்சம் அடைந்து கொண்டான்


கஜினி வந்த பொழுது எந்த வித எதிர்ப்பும் யாரும் கொடுக்கவில்லை! போர்வீரர்கள் ஒருவன் கூட இல்லை. மெய்யாகவே அது மனிதனுக்கும் இறைவனுக்கும் தான் போராகி போனது போலும்!


அவன் சூரையாடினான். கோவிலில் இருந்த சிலையை உடைத்து வெளியே கொண்டு வந்து போட்டான். உள்ளே இருந்த தங்கம், வைரம் எல்லாவற்றையும் அவனும் அவன் போர் வீரர்களும் பிரித்து கொண்டார்கள்!


ஊரை கொள்ளையடித்தான். கத்தியை கூட பிடிக்க தெரியாத சாதாரண மக்களை, வெட்டிக் கொன்றான்; தீ பற்ற வைத்து எரித்தான்


உங்கள் கடவுள் உங்களை காக்கவில்லைஎன்று கூக்குரல் இட்டான். பின், குதிரை மேல் இருந்த பான பட்டரை இழுத்து வந்தேன்.


எங்கே உங்கள் கடவுள்? உங்கள் கடவுளுக்கு பலம் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறாயா?’ என்றான்.


பானன் சொன்னான், ‘என்னை கொல்லாதே! ஒரு பிரமணனை கொன்ற பாவம், உன்னை பல ஜென்மங்களுக்கு விடாதுஎன்றான்.


முகமது கத்தியை எடுத்தான். ‘அது நம்பிக்கை கொண்ட உங்களுக்குத்தான். எனக்கல்ல!’


பானன் வாயில் யாரோ தண்ணீர் ஊற்றினார்கள். அவன் அந்த நீரை விழுங்கும் ஒரு நோடியில் அவன் தலை துண்டாகி விழுந்தது. அவன் வாயில் ஊற்றிய நீரும், அவன் இரத்தமும் சிவந்த மண்ணில் விழுந்து அதை இன்னும் சிவப்பாக்கியது!


————



5.


கஜினி முகமது சோமனாதபுரத்தை விட்டுச் சென்று இரண்டு நாட்கள் கழிந்தன.


நாடும் நகரமும், கூக்குரலிட்டு அழுது இன்னும் ஒயவில்லை!


பீமன் திரும்பி வந்தான். ஓடிச் சென்றுவிட்ட வீரர்களும் திரும்பி வந்தார்கள்.


நான் உங்கள் மன்னன். நான் உங்களை காப்பாற்றுவேன்’, என்றான்


அதோ அந்த வீரர்கள், அவர்களும் சொல்லி கொண்டு இருக்கிறார்கள். ‘நாங்கள் சத்திரியர்கள். உங்களை காப்போம். எங்களுக்காக நீங்கள் உழைத்து கொட்டுங்கள். நாங்கள் உங்களிடம் வரி வசூலிப்போம். உங்கள் உணவை உண்போம். உங்களை காப்பாற்றுவோம்; எங்களை நம்புங்கள்!’ என்றார்கள்!


மக்கள் இருக்கிறார்களே, என்ன படித்தாலும் என்ன பிரயோசனம்? மன்னனையும் வீரர்களையும் நம்பினார்கள். மறுபடியும் நம்பினார்கள்!


மீண்டும் பீமன் மன்னனாக அமர்ந்து ஆட்சி செய்தான்


இப்படி ஒரு முறை இரு முறை அல்ல. பதினேழு முறை, இந்த மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து, அந்த அரசனே கதி என்று இருந்தார்கள். அவனை தவிர வேறு யாரும் மன்னனாக முடியாது என்று நம்பினார்கள். அவரை தவிர வேறு மன்னன் இருக்க முடியாது என்று நம்பினார்கள்.


கஜினியும் பதினேழு முறை கொள்ளை அடித்தான். அவனுக்கே சோர்ந்து போயிருக்கும். அப்பொழுதும் இந்த மக்களுக்கு புரியவில்லை; திறமையற்ற அரசன், நம் வாழ்க்கைக்கு கேடு என்று.


மதத்தின் பேரை சொல்லி கொள்ளையடிக்கும் கொலைகாரனுக்கும், மதத்தின் பேரை சொல்லி மக்களை ஏமாற்றும் இந்த மன்னர்களுக்கும் என்ன வித்தியாசம்? ஒருவன், கத்தியை காட்டி கொள்ளை அடிக்கிறான். இன்னொருவன், மதத்தின் பேரில் புத்தியை வைத்து நம்மை கொள்ளை அடிக்கிறான்.


திறமையற்ற மன்னர்கள் கத்தைவாரில் இருந்து இன்றும் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்! மக்களுக்கு புரியும் வரை, அத்தகைய மன்னர்களும் இருக்கத்தானே செய்வார்கள்!


Comments

Popular posts from this blog

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் - 4

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - முதல் குறள்.

இரத்ததில் பொறித்துவிட்டான்!