திருக்குறள் - கடவுள் வாழ்த்து - முதல் குறள்.
ஒவ்வொரு புத்தகத்தை ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும், நமக்கு புது புது அர்த்தங்கள் தோன்றுவது சகஜம்.
திருக்குறள் ஒரு ஆழமான எண்ணங்கள் நிறைந்த ஒரு அருமையான படைப்பு. பிற்கால அவ்வையார் சொல்லுவது போல, ‘அணுவை துளைத்து ஏழ்கடலை புகட்டி / குறுக தரித்த குறள்’. அணுவே சிறியது. அதனை துளைத்தால் அந்த துளை எவ்வளவு சிறியதாக இருக்கும்? அந்த சிறு துளையின் உள்ளே ஏழ் கடலை புகுத்தினால்?
அவ்வளவு அறிவையும் இரண்டு அடிகளில் கொடுத்து இருக்கிறார் வள்ளுவர்.
அசாதாரண சிந்தனைகள்! வள்ளுவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் எத்தனை ஆழமான எண்ணங்களை கொடுக்கின்றன என்பது விந்தையே. யோசிக்க யோசிக்க அவைகளின் ஆழம் மிகுந்து கொண்டே போகிறதே ஒழிய குறைந்த பாடில்லை!
ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் புது அர்த்தம் தோன்றுகிறது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஏற்று கொள்பவர்கள் ஏற்று கொள்ளுங்கள். மற்றவர்கள் விட்டு விடுங்கள்! நான் ஏதோ உளறுகிறேன், என்று.
முதல் குறள் என்றுமே என்னை கவர்ந்த ஒன்று.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
மு.வ :
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
சாலமன் பாப்பையா :
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
என்னுடைய எண்ணம்:
'அ' என்ற சப்தமே, உலகின் அத்தனை மொழிகளிலும் முதல் எழுத்து. சீன, கொரிய, சப்பானிய மொழிகளை தவிர, ஏனைய மொழிகளில் எல்லாம், 'அ' வே முதல் எழுத்து!
எழுத்து என்ற சொல் அறிவை குறிக்கும். கல்வியை குறிக்கும். வெறும் எழுத்துக்களை அல்ல. அவ்வையார் 'எண்ணும் எழுத்தும் இரு கண் என அறிக' என்பார்.
'அ' வை முதலாக கொண்ட எழுத்துக்கள். எழுத்துக்களே அறிவுக்கும் ஞானத்திற்கும் அடிப்படை. அதாவது அத்தனை அறிவுக்கும் அடிப்படையானவன் ஆதி பகவான்.
பகவான் என்றால் என்ன? நிறைய அர்த்தங்கள் சொல்லுவார்கள். இருந்தாலும் இந்த இடத்தில் சரியானது இதுவே. ‘பக-’ என்னும் சொல், அதனை அடுத்துள்ள சொல்லை எதிர்மறையாக மாற்றும். உதாரணமாக, பகை = பக + ஐ. ஐ என்றால் தலைவன், நம்பிக்கையானவன், நம்மை வழி நடுத்துபவன். பகை என்றால் தலைவன் அல்லாதவன். நம்பிக்கைக்கு தகுதி அற்றவன், அவன் வழி அழிவை தரும். அது பகை. அட்டு என்றால் ஏழ்மையை காட்டுவது. பகட்டு என்றால் செல்வத்தை காட்டுவது!
அதே போல், பகவான் என்றால் வான் என்ற சொல்லுக்கு எதிர் மறையானது. அதாவது, வான் பரந்து விரிந்து முடிவில்லாத பெரியது. பகவான் என்றால் வான் எப்படி பெரியதோ அவ்வளவு சின்னது என்று பொருள். கடுகினும், சிறு துகளினும் சிறுத்தது. அணுவினும் மிக சிறியது. வான் எப்படி அளவிட முடியாத அளவிற்கு பெரியதோ, அதே போல அளவிட முடியாத அளவிற்கு பகவான், சிறியது!
அதைதான் கடவுள் துகள் என்று அறிவியல் அறிஞர்கள் சொல்லுகிறார்கள். பகவான் துகள்!
இந்த அகில அண்டத்திற்கும் அதுவே ஆரம்பம். ஆதி என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். அதனால்தான் அதை ஆதி பகவான் என்று சொல்லுகிறார்கள். ஆரம்ப துகள்! அதில் இருந்து தான் இந்த அண்டம் உருவாகிறது என்பார்கள்.
இந்த கண்ணோட்டத்தில் இந்த குறளின் பொருளை இப்படியும் பார்க்கலாம்.
அகரம் முதல் கொண்ட எழுத்துக்கள் மூலமாக உருவாகும் அத்தனை அறிவுக்கும், உலகின் ஆரம்பமான அளவிட முடியாத அளவிற்கு சிறிய துகளான பகவானே, முதன்மை ஆனவர்.
Comments
Post a Comment