திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் - 3.


 


குறள் 3:

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்


மு. உரை:

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்


சாலமன் பாப்பையா உரை:

மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்


கலைஞர் உரை:

மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்


எனது பார்வை.


மலர்மிசை ஏகினான் - மலர்களின் மேல் இருப்பவன். மலர் மேல் யார் இருப்பார்கள்? இறைவனை குறித்து சொல்லுகின்ற பொழுது, மலர் மேல் அமர்ந்து இருப்பவராகத்தான் பல இடங்களில் அவர் காட்டப்படுகிறார்.


மலர்கள் தான் உயிரின் ஆரம்ப நிலை. அதாவது, மலர்களே காயாகி, பின் கனியாகி, விதையாகி, அதன் பின் மரமாகி, மிருகங்களுக்கு இரையாகி, அந்த மிருகங்கள் ஊண் உண்ணும் மிருகங்களுக்கு உணவாகி, தொடரும் இந்த உணவு சங்கிலியின் ஆரம்பம் என்று பார்த்தால் அது மலர் தான்.


உயிர் உருவாகக்கூடிய இடங்கள் என்றுமே மனிதனை பிரமிக்க வைத்தன என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும். நம் முன்னோர்கள் உயிர் உருவாகும் இடங்களையே கடவுளாகவும் கடவுளின் உறைவிடமாகவும் கொண்டார்கள் என்பதே சரி.


மலர்கள் கனியாவது ஒரு மாயா ஜால வித்தைதானே? அதனால் தான் உயிரின் ஆரம்பம் மலரில் என்று கொண்டார்கள். கடவுளை அங்கே அமர்த்தினார்கள்!


அப்படி எல்லா உயிர்களின் ஆரம்பமாக இருக்கும் மலரிடம் சென்று அதன் மீது ஆட்சி செலுத்தும், கடவுள். அவரின் பெருமை வாய்ந்தப்பாதங்களை பணிந்தவர்கள், நிலத்தின் மீது நீண்ட நாட்களுக்கு வாழ்வார்.


இன்றைய காலக்கட்டத்தில் இதை படிக்கும் பொழுது இந்த விளக்கம்தான் சரி என கொள்ள முடியும்.


மலர்களின் மீது இருக்கும் இறைவன் என்று ஏன் சொல்ல வேண்டும்? உணவு சங்கிலியில் முதன்மையான மலரை குறிப்பதன் மூலமாக, வள்ளுவர் இயற்கை கடவுளின் உருவாக்கம் என்பதை குறிப்பதாகவே கொள்ள வேண்டும். மனிதன், மலர்களின் மீது இருக்கும் இறைவனை பணியும் பொழுது மலர்களையும் பணிகிறான். இயற்கையை மதிப்பவன் இவ்வுலகில் நீண்டு வாழ முடியும் என்பதையே இந்த குறள் உணர்த்துவதாக படுகிறது.


ஆகவே இதன் உரை:


எல்லா உயிர்களுக்கும் பிறப்பிடமான மலர்களில் வாழும் இறைவனை வணங்கும் மக்கள், இயற்கையையும் சேர்த்து வணங்கும் மக்கள், நீண்ட காலம் மண்ணில் வாழ்வார்கள்.


Comments

Popular posts from this blog

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - முதல் குறள்.

இரத்ததில் பொறித்துவிட்டான்!

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் - 8.