திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் - 2

 




குறள் 2:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்


மு. உரை:

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?


சாலமன் பாப்பையா உரை:

தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?


கலைஞர் உரை:

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை


மற்றவர்களின் உரையை மேலே குறிப்பிட்டுள்ளேன்


எனது கேள்வி, இறைவனை வணங்குவது என்பது சாதாரணமாக எல்லோரும் செய்வது; இதற்கு கல்வி அறிவு தேவையா என்ன?


வாலறிவன் என்பது மிக்க அறிவு கொண்டவன் என்று அர்த்தம் கொள்ளலாம். தூய அறிவு கொண்டவன்; ஆழமான அறிவு கொண்டவன் என்றும் கொள்ளலாம். அப்படி இருப்பவர் இறையாகவும் இருக்கலாம்; சாதாரண மனிதனாகவும் இருக்கலாம்


சாதாரண மனிதன் ஆழ்ந்த அறிவை பெறும் பொழுது, இறைவனின் நிலையை அடைய முடியும் என்பதை சொல்லுகிறாரோ?


எப்படி இருந்தாலும், ஆழ்ந்த பரந்த அறிவை பெற்ற ஒருவரின் பாதங்களை வணங்காதவன், கற்றதனால் என்ன பயன்? என்கிறார் வள்ளுவர். இதில் தன்னைவிட அதிக அறிவு என்று அவர் சொல்லவில்லை, என்பதை பார்க்க வேண்டும்.


அறிவு என்பது பல்வேறு விதங்களில் அறியப்படும். அறுபத்து நான்கு கலைகளில் திறமை பெற்றவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமான அறிவை பெற்று இருப்பார்கள்! இதில் எந்த அறிவு சிறந்தது என்றோ, எந்த அறிவில் ஒருவன் தன்னைவிட உயர்ந்தவன் என்றோ, எண்ணுவது எப்படி சரியாகும்?


ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட்டு பார்த்து இவரைவிட அவர் அறிவில் சிறந்தவர் என்று எண்ணுவது, தவறானது. ஏனென்றால், ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கு ஏற்ப அறிவு இருக்கும்.


அதனால் தான், வள்ளுவர் ஆழ்ந்த அறிவு கொண்டவனை வணங்க வேண்டும் என்கிறார். அந்த அறிவு எதில் வேண்டுமானுலும் இருக்கலாம். எந்த தொழிலில் வேண்டுமானாலும் இருக்கலாம். தன் தொழிலில் ஆழ்ந்த அறிவு கொண்டவன் தெய்வத்தின் நிலையை அடைகிறான்.


'செய்யும் தொழிலே தெய்வம்' என்று சொல்லுவது இல்லையா? எந்த தொழிலாக இருந்தாலும் அது உன்மத்தமானது என்பதையே நாம் உணரவேண்டும். அப்படி உணர்ந்தவன் தான் கல்வி அறிவு படைத்தவன். இதை உணர மறுப்பவன் கல்வி அறிவு அற்றவன்.


இந்த குறளுக்கு இன்னொரு விதமாகவும் அர்த்தம் கொள்ளலாம். ஆழ்ந்த அறிவு எந்த தொழிலில் இருந்தாலும் அவன் படைப்பாளி ஆகிவிடுகிறான். அதனால், இறைவனின் நிலையை எட்டுகிறான். எத்தனை மருத்துவர்களை நாம்கடவுள்என்று போற்றுகிறோம்? எத்தனை படைப்பாளிகளை நாம் இறைவனின் அவதாரம் என்கிறோம்? அத்தகையவர்களை யார் என்பதை உணர்ந்து அவரை வணங்காதவன், கற்றதனால் என்ன பயன்



அதாவது,


தன் தொழிலில், ஆழ்ந்த அறிவை பெற்றவன் எவன் என்பதை உணர்ந்து, அவன் இறைவனை ஒத்தவன் என்பதை அறிந்து, அவனை வணங்காதவர், கற்றதனால் பயன் என்ன?


முதல் குறளில் அறிவே தெய்வம் என்றார். இரண்டாம் குறளில் அறிவு எங்கு உள்ளது என்பதை அறிந்து அதை வணங்குவதே கல்வி என்றார்! மூன்றாவது குறளில் என்ன சொல்லுகிறார் என்பதை நாளை பார்ப்போம்!




Comments

Popular posts from this blog

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - முதல் குறள்.

இரத்ததில் பொறித்துவிட்டான்!

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் - 8.