மானம்
வீட்டில் நேற்று வரை கூட்டம் பொங்கி வழிந்து கொண்டு இருந்தது! இன்று யாருமே இல்லை!
கங்காதரனுக்கு மனசு ரொம்ப வலித்தது. அதைவிட தோல்வி வலித்தது. மக்கள் ஏன் தனக்கு ஓட்டு போடவில்லை என்று எண்ணும் பொழுது, ஒரு வேளை எல்லாவற்றையும் நம்பி விட்டார்களா?
மூன்று முறை சட்ட சபை உறுப்பினர்! பதினைந்து வருட காலங்கள், எம் எல் ஏ என்று ஊரில் சொன்னால் அது கங்காதரனாக தான் இருக்கும். இன்று முதல் வேறொருவன்!
தோல்வி, வெறும் தோல்வியாக இருந்தால் ஏற்று கொண்டு இருப்பாரோ என்னவோ. இப்படி டெப்பாசிட் கூட கிடைக்காமல் போனதில் ரொம்ப நொந்து போனார்!
இந்த ஊருக்காக எத்தனை நாட்கள் உழைத்து கொட்டி இருப்பார்? இந்த பதினைந்து வருடங்களில் ஊரே மாறிப்போனது. புது மேம்பாலங்கள், புதுப்பிக்கப்பட்ட இரயில் நிலையம்; புது பேருந்து நிலையம்! எத்தனை எத்தனை புதிதுகள். எல்லாம் அவரின், அல்லும் பகலும் அவர் உழைத்த உழைப்பின், சின்னங்கள்.
ஆனால், அவரை போன்ற நேர்மையானவர்கள் யார் இருந்தார்கள் அதற்கு முன்னால்? இல்லை பின்னால் தான் யார் இருக்கப் போகிறார்கள்? சொத்து சேர்த்தாரா? ஒரு கார் கூட சொந்தமாக வாங்கிக்கொள்ளவில்லையே!
ராஜேஷ்வரி, அது தான் அவர் மனைவி, மூன்று வருடங்களுக்கு முன்னால் இறந்து போனார்களே, அவர்கள் தான்! எத்தனை முறை சொல்லி இருப்பார்?
‘பேருக்கு தான் நான் எம் எல் ஏ மனைவி! ஏதாவது வசதி எனக்கு இருக்கா?’
‘உனக்கு வசதி கிடைக்கவா நான் எம் எல் ஏ ஆனேன்?’ அவர் பதில் கேள்வி.
இப்படி போகும் அவர்கள் சம்பாசணை! சரி, மனைவி சொல்லுகிறாரே என்று அவர் ஒரு குண்டுமணி கூட லஞ்சம் வாங்கியவர் இல்லை!
நேர்மை நியாயம் தர்மம்! இதற்கெல்லாம் அர்த்தம் அவரும் அவர் வாழ்க்கையும் தான். ஆனால், இன்று அரசியலில் நேர்மை நியாயம் சுயமரியாதை எல்லாம் கெட்ட வார்த்தைகள் ஆகிவிட்டன அல்லவா? மதம், பணம், மது இவை தானே இன்று அரசியல் உயிர் நாடிகள்?
மதத்திற்காக மக்கள் ஓட்டு போட்டார்கள். மதம்தானே வாழும்! நாடு எப்படி வாழும்? நாட்டில் இருக்கும் நல்லவர்கள் ஓரங்கட்ட படுவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?
என்ன, கங்காதரனின் மனம் தான் ஏனோ நடந்தவைகளை ஏற்க மறுத்தது!
அரசை பற்றியோ, அரசியலை பற்றியோ எதிர்கட்சிகள் பிரச்சாரம் இருக்கவில்லை. அவர் செய்த சேவைகளை யார் குற்றம் சொல்ல முடியும்? அவர் கொள்ளை அடித்தார் என்று சொல்ல முடியாதே! அவர் மீது எந்த அரசியல் அவதூறும் பேச முடியாதவர்கள், ஒருவரை அநியாயமாக அசிங்கப்படுத்தத்தானே முடியும்?
அப்படித்தான் செய்தார்கள். அவரை பற்றி பொய்களையும் வதந்திகளையும் பரப்பத்தொடங்கினார்கள். அவருக்கு அறிவில்லை என்றார்கள். அவர் சொல்லாத வார்த்தைகளை சொன்னதாக சொன்னார்கள்; அவர் எங்கோ பேசியதை எதுவாகவோ மாற்றினார்கள். இதையெல்லாம் எப்படித்தான் செய்கிறார்களோ?
இதில் மிக மோசமானது என்று கங்காதரன் நினைத்தது, அந்த சின்ன பெண்ணுடன் தன்னை சேர்த்து பேசியது. மிகவும் கோரமானது அதுதான்!
அயோக்கியதனம் ஆழ் மனதில் இருந்து வர வேண்டும். அப்பொழுதுதான் இது போல் ஒரு சாதாரண மனிதரை, நல்லவரை பற்றி அவதூறு பரப்ப மனம் ஒப்புக்கொள்ளும். அப்படி பரப்பிய அந்த சுரேஷ் தான் இன்று வெற்றி பெற்று இருக்கிறான்! அவன் நேர்மையானவன் என்றும் சொல்லி கொள்கிறான்! பக்தி நிறைந்தவன் வேறு. கோயில்களிலும் குளங்களிலும் பூஜை செய்வான்.
மத நம்பிக்கை உள்ளவன் என்று சொல்லி கொள்வான். நெற்றியில் பெரிய நாமம் சில நேரங்களில் போட்டுக் கொள்வான். எப்பொழுதும் ஆனால் வாய், சுவாமி பெயரை உச்சரித்து கொண்டே இருக்கும். என்ன பக்தி என்று பார்ப்பவர்களும் கேட்பவர்களும் வியப்பார்கள்! எவ்வளவு நல்லவனாக இருக்க வேண்டும்?
நல்லவர்களுக்கு வேஷம் தேவையில்லை கெட்டவர்களுக்கு தான் பல வேடங்கள் தேவைப்படுகின்றன.
நேற்று காலை கங்காதரன் வீடு ஒரே கூட்டமாக இருந்தது. எல்லோரும், தேர்தல் முடிவுக்காக காத்து இருந்தார்கள். முடிவு சாதகமாக இல்லை என்பது தெரிந்ததும், கொஞ்சம் கொஞ்மாக மக்கள் கூட்டம் குறைந்து கொண்டே வந்தது. சினிமாவில் காண்பிப்பது போலவே நடந்தது, என்று சொல்லலாம்!
இன்று காலை கூட்டமும் இல்லை. ஏன், டெபாசிட் கூட கிடைக்கவில்லை!
மனம் வெறுத்திருந்தார் கங்காதரன். எப்படி இனி வெளியே தலை காண்பிக்க முடியும்? அவரால் வெளியே போக முடியவில்லை.
வீட்டில் யாரும் இல்லை. வேதனை எண்ணங்கள் பலவாக ஓடிக் கொண்டு இருந்தன அவர் மனதில். என்ன செய்வது? எத்தனை கேவலப்படுத்திவிட்டார்கள். தான் செய்யாத ஒன்றை செய்ததாக கூறி, கேவலப்படுத்தி அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்கள். ஏனோ அவர் மனம் அதை ஏற்க மறுத்தது.
இறுக சாத்தி இருந்த வீட்டில் தனியாக எவ்வளவு நேரம் இருந்திருப்பார்? அவருக்கே தெரியாது. விடிந்து, பால் காரன் வந்து பாலை கதவருகில் வைத்துவிட்டு போய்விட்டான்! ஆனால், அவர் இரவெல்லாம் தூங்கவில்லை. தனிமை அவருக்கு புதிதாக இருந்தது.
ஏன் மக்கள் எனக்கு ஓட்டு போடவில்லை? ஒரு வேளை அவர்கள் பரப்பல்கள் எல்லாவற்றையும் நம்பிவிட்டார்களா? நான் அயோக்கியன் என்றே முடிவு எடுத்துவிட்டார்களா? நன்றாக இருக்கிறது. இவ்வளவு காலம் நாம் செய்து பணிகள் எல்லாம் வீணா?
அவர் மனம் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தது. மனம் சோர்ந்து போய் இருந்தவருக்கு, அந்த சிறு பெண்ணின் முகம் தோன்றியது. ஏதோ கல்லூரியில் படிக்கும் பெண் பிள்ளை. நம் பக்கத்து வீட்டு காரப் பெண். பக்கத்து வீட்டுக்காரப் பெண் என்றால் அவளை பற்றி இப்படி ஒரு அவதூறு. அரசியலுக்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாழ் செய்வார்களா? எப்படி பட்ட மனிதர்கள் இவர்கள்?
நான் எப்படி அந்த பெண்ணை மறுபடியும் பார்ப்பேன்? அவர் மனம் விடாது அசை போட்டது. குழப்பம் சாதாரணமாக இருந்தால் அதை சரி செய்யலாம். இதுவோ தோல்வியும், தன்மானமும் தவறிப்போன பிரச்சனையாக அவருக்குப்பட்டது. மானத்தை தொலைத்துவிட்டு எப்படி வாழ்வது?
நீண்ட யோசனைக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்தவராக எழுந்து நடந்தார். பின் கதவை திறந்து, அங்கிருந்த கிணற்றின் கயிற்றை மலமலவென்று உருவி எடுத்தார். வேகமாக நடந்து வீட்டிற்குள் வந்தார். பின் கதவை சாற்றி தாள் இட்டார். பிறகு படுக்கை அறைக்கு சென்று, மின்விசிறியை தொங்கவிடும் கம்பியில் கயிற்றை கட்ட ஸ்டூல் போட்டு ஏறி, கட்டினார். ஏதோ தோன்றியவராக, கீழே இறங்கி வந்தார். ஒரு பேப்பர் பேனா எடுத்து, எழுத தொடங்கினார்.
‘எனக்கும் அந்த இளம் பெண்ணிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதை உங்கள் எல்லோர் மனதிலும் ஆணித்தரமாக பதிய வேண்டும் என்பதற்காகத்தான் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். தோற்று போனதற்காக அல்ல. என் மானம் பெரிதல்ல. அவள் மானம் முக்கியமானது!’
எல்லா விவரங்களையும் ஒன்று விடாமல் எழுதினார். ஆணித்தரமாக எழுதினார்.
விடிகாலை வயிறு பசித்தது. சாகும் முன்னால் சாப்பாடு எதற்கு?
எழுதி வைத்துவிட்டு கடிகாரத்தை பார்த்தார்! மணி ஏழரை என்றது.
சாய்ந்தரம் ஆகியும் அவர் கதவில் போடப்பட்ட பால் அப்படியே கிடந்தது! கெட்டு போயிருக்கும்!
Comments
Post a Comment