மேற்கு தமிழகம்!

 மேற்கு தமிழகம், சரியா தவறா?


மாநிலங்கள் 1956ல் திருத்தி அமைக்கப்பட்டது! அப்பொழுது, பேசப்படும் மொழியை மட்டுமே கருத்தில் கொண்டு புது மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.


மொழி வாரியாக பிரிக்கப்பட்ட மாநிலங்கள் நல் ஆட்சியை கொடுக்க இந்த பிரிவு ஏதுவாக இருக்குமா? அவைகளின் உள்ளே இருக்கும் உட்பிரிவுகள், சிறுபான்மை அமைப்புகள் என்று பலருக்கும் நியாயம் கிடைக்குமா? இப்படி எல்லாம் அவர்கள் யோசிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.





காரணம், அன்று அரசியலில் ஆகட்டும், சமுதாயத்தில் ஆகட்டும், பல பிரச்சனைகள் ஊரெங்கும் மண்டி கிடந்தன. அதனால், நாடு ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே பெரும் தேவையாகவும், ஜனநாயகத்தை காப்பது முதல் கடமையாகவும் ஆட்சியாளர்களுக்கு இருந்து இருக்க வேண்டும்.


அப்படி பட்ட நிலையில் மாநிலங்களை பிரிப்பது என்பது என்னவோ நாட்டை கூறு போடுவதைப் போல எண்ணிக்கொண்டு அவர்களை தண்டனைக்கு உரியவர்களாக பார்த்தது நாடு!


அதனால் தான், மாநிலங்களை பிரிப்பது என்பது உணர்வுகளுடன் விளையாடுவது போல் நிகழ்ந்தது.


உண்மையில் மாநிலங்களை பிரிப்பது, ஒரு புது மாவட்டத்தை உருவாக்குவதுப் போலத்தான் இருக்க வேண்டும். புது மாவட்டத்தை உருவாக்குவது, மாநிலத்தை அல்லது நாட்டை வெட்டுவதா என்ன?


புது மாவட்டத்தை உருவாக்குவது என்பது நிர்வாகத்தை சீர்படுத்தும் முயற்சியில் ஒன்று. அதிக நிதி ஒதுக்கீடு, முடிவெடுக்கக் கூடிய ஆட்சியாளர் போன்றவர்கள், அருகிலேயே இருத்தல் போன்ற சின்ன சின்ன ஆனால் முக்கியமான விஷயங்கள், மக்களுக்கு அரசின் உதவிகளும் திட்டங்களும் போய் சேர வசதியாக இருக்கும்.


அதனால் தான், ஒரு மாவட்டம் உருவானதும் அதனால் ஏற்படும் வளர்ச்சி அபரிதமானதாக இருக்கிறது. மாவட்டங்கள் மேலும் மேலும் பிரிவதும் மக்கள் அதனால் திருப்தி அடைவதும், அவர்களே வந்து புது மாவட்டங்களை உருவாக்க சொல்லி கேட்பதும், இதனால் தான்!


அதே போல், புது மாநிலம் உருவாக்கப்படும் பொழுது புது மற்றும் பழைய மாநிலங்கள் இரண்டுமே எப்பொழுதும் பல நன்மைகளையே பெறுகின்றன.


முடிவெடுக்கும் தலைமை அருகிலேயே இருப்பது ஒரு பெரும் விஷயம். எந்த பிரச்சனையாக இருந்தாலும் தீர்வு அருகிலேயே இருக்கிறது. சிறிது நாட்களில் தனி உயர் நீதி மன்றம், தனியான பல அமைப்புக்கள் சட்டம் மற்றும் நீதியை பாதுகாக்கக் கூடியவைகளாக அமைகின்றன.


ஒன்றிய மற்றும் மாநில நிதி நிலைமை சிறப்பானதாக இருக்கும். ஊழல் பெரும் அளவு குறைய வாய்ப்புகள் அதிகம்!


அதனால், மா நிலங்கள் பிரிவை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய முதல் விதி. தனி மாநிலம் கேட்பவர்கள், பிரிவினை வாதிகள் அல்ல! இரண்டாவது, அது எல்லோருக்கும் நன்மை பயக்கக் கூடியதா இல்லையா? என்பதை தான் பார்க்க வேண்டும்.


மூன்றாவது, மக்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்டால்தான் அவர்களுக்கு தனி மாநிலம் கொடுக்கப்பட வேண்டும் என்கின்ற பிற்படுத்தப்பட்ட பார்வையில் இருந்து நாம் வெளியேற வேண்டும். புது மாநிலம்  வளர்ச்சியை கொடுக்குமா? இரண்டு மாநிலங்களும் வளருமா என்பதே கேள்வியாய் இருக்க வேண்டும்.


இந்த வகையில் பார்த்தால், கண்டிப்பாக, தனி மாநிலமாக மேற்கு தமிழகம் உருவாகுமானால், வளர்ச்சி கண்டிப்பாக இரண்டு தமிழகங்களுக்கும் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது! இரண்டு மாநிலங்களில் தமிழ் பேசப்படும் மொழியாக மாறும்! ஆட்சி மொழியாகவும் இருக்கும். இரண்டு மாநிலங்களுக்கும் இடையே நட்பான ஒரு போட்டி இருக்கும். அது இரு மாநிலங்களும் வளர்வதை கண்டிப்பாக ஊக்கப்படுத்தும்.


அதனால், நாம் மேற்கு தமிழகம் உருவாவதை வரவேற்போம்!


Comments

Popular posts from this blog

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - முதல் குறள்.

இரத்ததில் பொறித்துவிட்டான்!

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் - 8.