சொர்க்கம்
சரோஜாவின் அம்மா அவளை முறைத்தாள்!
’எத்தனை தடவைதான் நீ அழுதுகிட்டே வந்து நிப்ப, மடப்பொண்ணு!’
அவன் ஒரு கல் நெஞ்சுக்காரன். ரவுடி. காட்டான்!
சின்ன வயசில் இருந்தே சரோஜாவிற்கு மாறனை தெரியும். நான்கு வீடுகள் தள்ளி அவர்கள் வீடு. அந்த சிறு சந்தில் இருந்த பத்து பதினைந்து பையன்கள், இரண்டு மூன்று கூட்டங்களாக பிரிந்து விளையாடுவார்கள். பெண் பிள்ளைகளும் அப்படித்தான்! பெண் பிள்ளைகள் ஆண் பிள்ளைகளோடு அதிகமாக விளையாட மாட்டார்கள்.
ஆனால், சரோஜா எப்பொழுதும் மாறனை தேடிப் போய் அவனுடன் தான் விளையாடுவாள்! ஒவ்வொரு முறை அவனோடு விளையாடும் பொழுதும் கடைசியில் அவனிடம் அடி வாங்கிக் கொண்டு, அழுது கொண்டு தான் வீட்டுக்கு வருவாள்!
அவ்வளவு அடிவாங்கிய பின்னும், அடுத்த நாள் மீண்டும் அவனை தேடிப் போவாள்! மீண்டும் விளையாட்டின் முடிவில் அவனிடம் அடிவாங்கிக் கொண்டுத்தான் கண்களில் நீர் தாரை தாரையாய் வழிய வருவாள்!
கிறுக்கு புள்ள! அவள் அம்மா அங்கலாய்ப்பாள்!
மாறன் ஒரு வகையில் சரோவிற்கு சொந்தம்தான். அவள் தந்தையின் பெரியப்பா மகளின் மகன். மாமன் தான் அவளுக்கு!
அவள் வளர்ந்து நிற்கும் பொழுதும் அவளை அவன் பார்த்துக் கொண்டுத்தான் இருந்தான்.
‘ஏய், இங்க வாடி! போய் இந்த கரண்ட்டு பில் கட்டிட்டு வா!’ என்பான். சில நேரங்களில் ரேஷனில் போய் அவர்கள் வீட்டுக்கு பொருட்கள் வாங்கி வரச் சொல்லுவான்!
அவனுக்கு அவன் அம்மா அப்பா கொடுத்த வேலையை அவளிடம் அவன் கொடுப்பான். அவளும் சத்தம் இல்லாமல் அந்த வேலையை செய்வாள்!
ஒரு முறை அவனுக்காக அவள் மின் கட்டணம் கட்டிவிட்டு, கார்டையும் மீதி பணத்தையும் கொடுப்பதற்கு அவன் வீட்டு பக்கம் போனவள், அவனுடைய தாயாரை பார்த்தாள்.
‘என்ன விஷயம், சரோ?’
அவன் தாயாருக்கு அவளை பிடிக்கும். அந்த சந்தில் இருந்த பெண்களில் கொஞ்சம் ‘கலராக’ இருந்தவள் என்பதால் மட்டும் அல்ல! வட்ட முகம், கருத்து இடுப்பு வரை தொங்கிய கூந்தல்! சொலுங்க எண்ணை பூசி பின்னி விட்டு இருப்பாள்! கொஞ்சம் சதை பிடிப்பாக இருப்பாள். குண்டு என்று சொல்ல முடியாது. இருந்தாலும் யாராவது குண்டு என்று சொல்லிவிட்டால் சண்டைக்கு போவாள்!
சில நேரங்களில் மாறன் அவளை ‘ஏய், குண்டு’ என்பான். அது செல்லமாக என்று அவளுக்கு தோன்றும். இருந்தாலும் கோபமாக அவனை முறைப்பாள்!
சில நேரங்களில் இரட்டை பின்னல் போட்டு சிறு பிள்ளையாக அவள் தெரிவாள். சிறு பிள்ளை தானே, அவள்!
அன்றும் அவள் இரட்டை பின்னல் போட்டு இருந்தாள்.
மாறனின் தாயார், ‘என்ன விஷயம்’ என்று கேட்டதும்.
அவள் எதார்த்தமாகத்தான் பதில் சொன்னாள்.
‘மாமா பில் கட்டச் சொல்லி கொடுத்து இருந்தது! கட்டிட்டேன். அந்த கார்டை கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன், அத்தை!’ என்றாள்.
‘ஓ! உன் கிட்ட கொடுத்துட்டு போயிட்டானா, துரை! சோம்பேறி கழுதை! வரட்டும் அவன்!’
‘இல்ல அத்தை! நான் அங்க போயிட்டு இருந்தேன் அதனாலதான் என்கிட்ட கொடுத்தது!’
‘நீ விட்டு கொடுக்க மாட்டியே!’
அந்த பேச்சு அத்தோடு முடிந்தது என்று தான் சரோ எண்ணினாள். ஆனால், நடந்தது வேறு!
அடுத்த நாள், மாறன் சாலை ஓரத்தில் அவளுக்காக காத்துக் கொண்டு இருந்தான்.
‘ஏய், எதுக்காக அம்மாகிட்ட என்ன மாட்டி விட்ட?’
‘இல்ல, நான் எதுவும் செய்யவில்லை?’ அவள் பயத்தில் நடுங்கினாள். அவளுக்கு அடி வாங்கிய பயம் நிறைய இருந்தது.
‘அத்த கேட்டாங்க! அதுக்கு தான் பதில் சொன்னேன். நானா தான் வாங்கிட்டு போனேன்னு கூட சொன்னேன்!’.
நடு ரோடு! அவளிடம் அவன் உரிமையாக கேள்விகள் கேட்டு கொண்டு இருந்தான்.
‘நீ எதுக்காக வீட்டுக்கு போனன்னு கேட்டேன். புரியுதா?’
‘உம்ம்’, கொட்டிவிட்டு தலையை ஆட்டினாள்.
பளீர் என்று ஒரு அரை விழிந்தது! அவள் கண்கள் உடனே கலங்கின. நீர் சட்டென்று கண்களில் இருந்து ஓடி வந்தது.
அழ வேண்டும் என்று அவள் அழவில்லை. அதுவாக தானாக அடக்க முடியாமல், அடியின் வலியில் அழுகை கண்ணீராய் வெளி வந்தது.
அவள் விம்மினாள்.
அவள் பள்ளிக்கு செல்லுவதற்காக பாவாடை தவணியில் இருந்தாள். இரட்டை பின்னலை மடித்து நீல நிற ரிப்பனால் கட்டி இருந்தாள். நெற்றியில் ஒற்றை ஸ்டிக்கர் பொட்டு நீட்டமாக, கீழே மட்டும் ஒரு மின்னும் கல் இருந்தது.
அவள் மார்பின் வளைவுகள் தெரியாத மாதிரி புத்தகங்களை அணைத்துக் கொண்டு இருந்தாள்.
அந்த அடியின் வலியில் அவள் கையில் இருந்த புத்தகங்கள் கீழே சிதறி விழுந்தன.
பக்கத்து கடையில் நின்று கொண்டு இருந்த யாரோ, ‘டேய், என்னத்துக்குடா சிறு புள்ளைய அடிக்கற’, என்றான்.
மாறன் உடனே நகர்ந்து போய்விட்டான்!
அந்த ஆள் அருகில் வந்து ‘யாருமா நீ? எதுக்குமா அவன் உன்னை அடிக்கறான்?’
அவள் பதில் கூறவில்லை. ஆனால் விம்மி விம்மி அழுதாள். அழுது கொண்டே பள்ளிக்கு சென்றுவிட்டாள்.
மாலை வீடு திரும்பியவள், அடி வாங்கிய நினைவுடனே வந்தாள். ஆனால், எதையும் அவள் பெரிதாக எதிர் பார்க்கவில்லை.
அவள் வீட்டிற்குள் நுழைந்ததும், அவள் அம்மா கோபமாக அவளை இழுத்துக் கொண்டு ஆவேசமாக வெளியே வந்தாள். வந்தவள் நேராக நான்கு வீடுகள் தாண்டி, மாறனின் வீட்டின் முன் வந்து நின்றாள்.
‘ஏய், கௌசல்யா...! கௌசல்யா!’ என்று சத்தமாக இரஞ்சினாள்.
‘அம்மா, அம்மா! என்னமா பண்ணற?’, சரோவின் முனுகல் அவள் காதில் விழவில்லை.
‘நீ சும்மா கிடடீ! அவன் என்ன உன்ன எப்ப பார்த்தாலும் அடிச்சிட்டே இருக்கறது? இன்னக்கி அவனுக்கு இருக்குது பார் சங்கு!’
‘ஏய், கௌசல்யா!’ அவள் மீண்டும் கத்தினாள்.
மாறனின் தாயார் வெளியே வந்தாள். கூடவே மாறனும் வெளியே வந்தான். அதற்குள் அவ்வளவு பெரிய கூட்டம் எப்படி சேர்ந்தது என்று தெரியவில்லை. பத்து பதினைந்து பேர், சர சர வென்று சேர்ந்து விட்டார்கள்.
‘உம் மகன் என்ன நினச்சுட்டு இருக்கறான்? சும்மா என் பொண்ண எதுக்கு அடிக்கறான் அவன்? அதுவும் வயசு வந்த பொண்ண?’
மாறனின் அம்மா அவனை பார்த்து கேட்டாள்.
‘என்னடா? அடிச்சியாடா?’
அம்மாவுக்கு எப்படி விஷயம் தெரிஞ்சதுன்னு அவளுக்கு தெரியலை. ஆனால், அவள் கொஞ்சம் பயந்தாள். இதனால் மேலும் அவளுக்கு பிரச்சனை ஆகுமோ என்று எண்ணினாள்.
அம்மாவின் கேள்விக்கு ‘ஆம்’ என்று மாறன் தலை ஆசைத்தான்.
‘இத்தனை நாள் இவளும் சின்ன பொண்ணு, அவனும் சின்ன பையன்! ஏதோ விளையாட்டுல அடிச்சு கிட்டாங்க! இன்னைக்கு அப்படியா?
‘வயசாகல அவனுக்கு! இவளுக்கும் வயசாச்சு! இவளை இன்னைக்கு காலைல நம்ம அண்ணாச்சி கடை பக்கம் வைச்சு அடிச்சு இருக்கான். அண்ணாச்சி வந்து சொன்னார். இல்லாட்டி இந்த சின்ன பொண்ணு வந்து சொல்லுவாளா?
‘நடு ரோட்டுல வச்சு அடிச்சு இருக்கான், உன் மகன்!’
அவள் காட்டு கத்தல் கத்தினாள். கௌசல்யா ஒரு கணம் ஆடிப் போய்விட்டாள்.
பிறகு சொன்னாள். ‘சரிம்மா! தப்புதான். நான் கண்டிச்சு வைக்கிறேன். அவன் அப்பா வந்தாருன்னா, அவர்கிட்டையும் சொல்லி கண்டிக்க சொல்லறேன்!’ என்றாள்.
‘அதெல்லாம் சரி! அவன மன்னிப்பு கேட்க சொல்லு. செஞ்சது தப்புன்னு அவனுக்கு தெரியனும் இல்ல. இனி மேல் பண்ண மாட்டேன்னு அவனை சொல்ல சொல்லு!’
இப்பொழுது நடுவில் மாறன் பேசினான். ‘மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது!’
சரோவின் தாயாருக்கு சூர்ரென்று கோபம் ஏறியது. அவனை பார்த்து பேசினாள்.
‘என்ன தைரியம் பாருங்க, பையனுக்கு! யாரும் ஒண்ணும் செய்ய மாட்டாங்க என்கிற தைரியம்’.
அவனை பார்த்து தொடர்ந்து பேசினாள். கத்தினாள், உச்ச குரலில்.
‘அவளை அடிக்கறதுக்கு உனக்கு என்னடா உரிமை இருக்கு? நீ யாரு எம் பொண்ண தொடறதுக்கு? அதுவும் நடு ரோட்டுல கை நீட்றான்’.
இந்த நேரத்தில் அவள் நாக்கில் சனி புகுந்ததோ என்னமோ தெரியவில்லை. அவள் பேச்சு வாக்கில் இதை கேட்டு தொலைத்தாள்.
‘நீ என்னடா அவளுக்கு? தாலி கட்டின புருஷனா? எப்படிடா கை நீட்டலாம்?’
அவன் உடனே பதில் கொடுத்தான். ஒரு நிமிடம் கூட யோசிக்கவில்லை.
‘ஆமா! நான் தான் கட்டிக்க போறவன். அவள் என் பொண்டாட்டி’, என்றான்.
அவன் அப்படி சொல்லுவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சரோ கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை. அவள் அம்மா அப்படியே அமைதியாகிவிட்டாள்.
சலசலப்பாக இருந்த அந்த இடம், மௌனம் சாதித்தது. கூட்டம் கொஞ்சம் பெருத்துத்தான் இருந்தது. என்ன சொல்லுகிறான் அவன்? பொண்டாட்டி என்றால் மட்டும் அடிக்கலாமா?
அங்கே இருந்த அத்தனை பேரில் ஒருத்தருக்கு கூட கேட்க தோன்றவில்லை. அந்த அமைதியில் இருந்து விழித்து கொண்டவர்களில் முதலாவது, கௌசல்யாதான்!
‘அவந்தான் சொன்னானே கேட்கலயா உனக்கு, சரோ? உள்ள வா!’
கௌசல்யா சரோவின் கையை பிடித்து அவளை இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் நடக்க முற்பட்டாள். சுற்றி இருப்பவர்களை பார்த்து ஒரு கத்து கத்தினாள்.
‘எல்லாரும் இங்க என்ன வேடிக்கை பார்க்கறீங்க! கிளம்புங்க! அது தான் எல்லாம் முடிஞ்சிடுச்சே?’
அவளுக்கு பிரச்சனை தீர வேண்டும் என்பது தான் முக்கிய தேவையாக இருந்தது. சரோவின் அம்மாவிற்கோ என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.
‘என்ன என்ன? என்ன பண்ணறீங்க!’ என்று பொருமினாள்.
சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், அன்று சரோவிற்கு கல்யாணம் ஐந்து நிமிடத்தில் முடிவு செய்யப்பட்டது. சரோவை உள்ளே அழைத்து சென்ற கௌசல்யாவும் அவளிடம் கேட்டாள், அவள் அம்மாவும் அவளிடத்தில் கேட்டாள்!
‘சரோ, உனக்கு அவனை புடிச்சிருக்கா?’
அவள் அமைதியாக நின்றாள். பிறகு அம்மா கேட்கும் பொழுது ‘ஆம்’ என்று தலை ஆட்டினாள்!
‘ஏய், அவனே அடிக்கறவண்டீ! அவன் கிட்ட நீ எப்படி சந்தோசமா இருப்ப?’ அம்மா ரொம்ப வருத்தப்பட்டாள்.
‘உன் அழகுக்கு ராஜா மாதிரி மாப்பிள்ளை பார்க்கிறண்டீ! அவன் கிட்ட என்னத்தடீ பாத்த?’
உண்மைதான். என்னத்தைதான் பார்ப்பாங்களோ இந்த பொண்ணுங்க?
அவன் வெறியன், ரவுடி!
அவர்களுக்கு கல்யாணம் நடந்தது!
அவன் மிக வெறியனாக இருந்தான். முதல் இரவில் அவனின் வெறித்தனம் ஆக்ரோசமாக வெளிப்பட்டது. அன்று அவன் ஆசை அடங்கி தீர்ந்த பொழுது, அவள் அவன் வியர்வையில் குளித்து இருந்தாள். அவளுக்கு அவன் மேல் இருந்த ஆசை அதன் பிறகு நிறைய கூடி இருந்தது.
சோர்ந்து போய் உடல் முழுவதும் வியர்வையில் நனைந்து, அவன் இரண்டு கைகளையும் விரித்துப்படுத்து கிடந்தான். சரோவும் அவனை நெருங்கி அவன் மார்பு மீது தலையை வைத்தாள்.
‘ஏய், தள்ளிப் படு’ அவன் கட்டளையை முணு முணுத்தான்!
அந்த வெறித்தனம், அவள் மேல் அவனுக்கு இருந்த ஆசையை வெளிபடுத்தியது. சில நாட்கள், அவன் அடிக்கும் பொழுது, அவள் அவனுக்கே சொந்தம் என்பதை மீண்டும் மீண்டும் உறுதி செய்வதைப் போல் இருந்தது!
ஒரு வகையில் அவளுக்கு அது சந்தோசமாக இருந்தது. அவனால் கிடைத்த சுகம் மட்டும் அல்ல. அந்த அடி கூட ஒரு வகை சுகத்தை கொடுப்பது போல இருந்தது அவளுக்கு! ஒரு பாதுகாப்பு! ஒர் ஆனந்தம்!
அதனால், அவள் அழுதாளும் அவள் பெரிதாக வருத்தப்படவில்லை.
இப்பொழுதும் அப்படித்தான் அவள் அடி வாங்கிக் கொண்டு மீண்டும் தாய் வீட்டில் வந்து கண்ணீர் வடித்துக் கொண்டு நின்றாள்.
‘நான் தான் அப்ப இருந்தே அடிச்சுக்கிறனே. அவன் ரவுடி. அவன நம்பி போகாத. எத்தன தடவை அடிச்சுகிட்டன்? என் வார்த்தையை யார் கேட்டாங்க? இந்த வீட்டுல என் வார்த்தைய அவரும் மதிக்கறதில்ல நீயும் மதிக்கறதில்ல. அப்புறம் வந்து என்கிட்ட புலம்பிட்டே இருங்க! என்ன?’
‘அது இந்த வாட்டி நல்ல அடிச்சிடுச்சும்மா!’
கன்னத்தை காட்டினாள். அதில் அவன் கையின் அச்சு இன்னும் போகவில்லை. சிவப்பாக மூன்று கோடுகள் அந்த மென்மையான பெண்மை கன்னத்தில்!
எந்த தாயால் பொறுத்துக் கொள்ள முடியும்?
‘வாடி போகலாம்! அவங்க வீட்டு வாசல்ல நின்னு நாக்க புடுங்கற மாதிரி நாலு வார்த்தை அந்த கௌசல்யாவ கேட்டத்தான் என் மனசு ஆறும்’.
‘இல்லம்மா! என்னால அங்க இருக்க முடியாதுமா. இத்தனை அடி வாங்கிட்டு எப்படிம்மா நான் அங்க இருக்கறது? என்ன பஞ்சாயத்து நடந்தாலும், சரின்னு சொல்ற அந்த ஆளு, எல்லாரும் அந்த பக்கம் போனதும், இந்த பக்கம் எனக்கு கச்சேரிய ஆரம்பிச்சுடுவாரேம்மா! நான் என்னம்மா செய்யறது?’
அவள் உதடுகள் துடித்தன. அவள் பின்னலை எடுத்து முன்னால் போட்டுக் கொண்டே சொன்னாள்!
‘நான் எத்தன தடவை அம்மா, ஓடி வர்ரது? என்னால் திரும்பி எல்லாம் போகவே முடியாதும்மா! இனி மேல் நான் இங்க தான் இருக்க போறேன். என்னால அதோட போய் இருக்க முடியாது’, என்று சொன்னாள்.
காலையில் வந்தவளும் தாயும் அவ்வளவு நேரம் பேசினார்கள். காலை டீ சாப்பிட்டார்கள். பிறகு மதிய சாப்பாடும் சாப்பிட்டார்கள். மாலை ஒரு நான்கு மணி அளவில் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்து இருந்தார்கள்.
இனி மேல் என்ன நடந்தாலும் சரோ திரும்ப மாறனுடன் வாழ போவது இல்லை! இது நிச்சயம் என்று இருவரும் முடிவு செய்தார்கள்.
அந்த ஆள், அது தான், அந்த மாறன். வருவான். கண்டிப்பாக வருவான். ஆனால், நான் போகமாட்டேன். சரோ ஒரு முடிவுடன் இருந்தாள். இப்படி போட்டு அடிக்கறவன் கிட்ட எப்படிம்மா வாழ்றது.
கௌசல்யா ஆறுதலாத்தான் இருக்கிறாள் ஆனால் அடி வாங்குவது சரோ அல்லவா?
காலை பத்து மணிக்கு வந்தவள். நீண்ட நேரமாக அங்கேயே இருந்தாள். ஒரு வைராக்கியத்தோடு!
ஏறக்குறைய எட்டு மணி இருக்கும்.
‘ஏய்!’
அவந்தான். அவன் குரல் ஆழமாக ஒலித்தது.
‘ஏய்!’ மீண்டும் கூப்பிட்டான். சரோவின் அம்மா சைகை செய்தாள், சும்மா இருக்க சொல்லி!
‘ஏய்!’
மூன்றாவது முறை மிக சத்தமாக அவன் குரல் வீட்டின் எல்லா மூலைகளிலும் எதிர் ஒலித்தது.
சரோ எழுந்து ஓடினாள், ஏதோ கட்டுண்டவள் போல!
‘ஏய், சரோ’
அவள் அம்மா வேறு ஏதோ ஒரு கிரகத்தில் இருந்து கத்தினார்கள். அவளுக்கு தூரமாக கேட்டது.
அவள் வீட்டை விட்டு வெளியே வந்தாள். அவன் வாசலில் இருந்து இரண்டு அல்லது மூன்று அடி தான் தள்ளி நின்று இருப்பான்.
இன்னொரு அடி எடுத்து முன்னால் வைத்தாள்.
‘என்னடி பண்ற இங்க?’
அவள் எந்த பதிலும் சொல்லவில்லை.
அவன் இரண்டு அடி முன்னாள் வந்து, அவள் தலை முடியை பிடித்தான். கொத்தாக முடியை பிடித்து அவளை இழுத்துக் கொண்டு சென்றான் அவனுடைய வீட்டிற்கு நான்கு வீடுகள் தள்ளி!
அவள் இடம் இருந்து எந்த குரலும் வரவில்லை. அவன் அவளை படுக்கையில் தள்ளி அவன் வியர்வையில் அவளை குளிப்பாட்டியப் பொழுதும், அவள் அமைதியாக இருந்தாள்.
நெருங்கி வந்தவளை ஒரு கையால் தள்ளிவிட்டு சோர்ந்து போய் மாறன் தூங்கிப் போனான்.
அவளும் சிறிது நேரத்தில் தூங்கிப் போனாள். அவள் முகம் சந்தோசமாக முழு நிலவை போல் இருந்தது!
இந்த சில நிமிட சந்தோசத்திற்கு பிறகு அவளுக்கு கண்ணீர் உண்டு, பல மணி நேரங்களுக்கு! ஆனால் அவை எல்லாம் அவளுக்கு தெரியவில்லை!
- 2021 ஏப்ரல் 10
Comments
Post a Comment