மானம்
வீட்டில் நேற்று வரை கூட்டம் பொங்கி வழிந்து கொண்டு இருந்தது ! இன்று யாருமே இல்லை ! கங்காதரனுக்கு மனசு ரொம்ப வலித்தது . அதைவிட தோல்வி வலித்தது . மக்கள் ஏன் தனக்கு ஓட்டு போடவில்லை என்று எண்ணும் பொழுது , ஒரு வேளை எல்லாவற்றையும் நம்பி விட்டார்களா ? மூன்று முறை சட்ட சபை உறுப்பினர் ! பதினைந்து வருட காலங்கள் , எம் எல் ஏ என்று ஊரில் சொன்னால் அது கங்காதரனாக தான் இருக்கும் . இன்று முதல் வேறொருவன் ! தோல்வி , வெறும் தோல்வியாக இருந்தால் ஏற்று கொண்டு இருப்பாரோ என்னவோ . இப்படி டெப்பாசிட் கூட கிடைக்காமல் போனதில் ரொம்ப நொந்து போனார் ! இந்த ஊருக்காக எத்தனை நாட்கள் உழைத்து கொட்டி இருப்பார் ? இந்த பதினைந்து வருடங்களில் ஊரே மாறிப்போனது . புது மேம்பாலங்கள் , புதுப்பிக்கப்பட்ட இரயில் நிலையம் ; புது பேருந்து நிலையம் ! எத்தனை எத்தனை புதிதுகள் . எல்லாம் அவரின் , அல்லும் பகலும் அவர் உழைத்த உழைப்பின் , சின்னங்கள் . ஆனால் , அவரை போன்ற நேர்மையானவர்கள் யார் இருந்தார்கள் அதற்கு முன்னால் ? இல்லை பின்னால் தான் யார் இருக்கப் போகிறார்கள...